தமிழக அரசு விவசாயிகள் வாங்கிய கடன்களில் சிறிய அளவிலான தொகை மட்டுமே தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது.இதனால் விவசாயிகள், பயிர் கடன் தள்ளுபடி செய்துள்ளதை மறுபரிசலனை செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என கூறி வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியிடம் தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் உதயகுமார் தலைமையில் விவசாயிகள் மனு அளித்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் உதயகுமார், 'தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள கடன் நிவாரணம் விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கையில் சிறு விவசாயிகளுக்கு அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்றும், பெரிய விவசாயிகளுக்கு 50 சதவீத கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே முழு கடன் நிவாரணம் வழங்கப்படும் என்றும், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே, அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என்றும் குளறுபடியான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் காலம் தவறிய மழை, பருவமழை பாதிப்பு மற்றும் இயற்கை சீற்றங்களால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விவசாயம் அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைத்தால் கடன் நிவாரணம் கோர வேண்டிய அவசியமே இருக்காது. கடன் நிவாரணம் என்பது காலத்தின் கட்டாயமாகவும் அரசின் கடமையாகவும் உள்ளது. எனவே, அரசு தேர்தல் வாக்குறுதியின்படி மறுபரிசீலனை செய்து உடனடியாக முழுமையான கடன் நிவாரணத்தை அறிவிக்க வேண்டும். இதன் ஒரு பகுதியாக மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்களை சந்தித்து முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அளித்து வருகின்றனர்.
அதேபோல், உரிய கடன் நிவாரணம் அறிவிக்கப்படாத பட்சத்தில், வரும் திங்கட்கிழமை (1-ம் தேதி) மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு கடன் நிவாரணம் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மேலும், அதற்குப் பிறகும் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சென்னை நகரில் பேரணி நடத்தப்படும். காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து, பெரியவர் - சிறியவர் என்ற பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான கடன் நிவாரணத்தை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

