புதுடெல்லி: நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய சவால்கள் குறித்து ஆலோசிக்கும் வகையில், தலைநகர் டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள பயங்கரவாத தடுப்பு மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (நவம்பர் 19) தொடங்கி வைக்கிறார். தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. சார்பில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஏற்பாட்டில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இம்முறை ‘எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தல்கள்’ மாநாட்டின் முக்கிய விவாதப் பொருளாக இடம்பெற உள்ளன.
பல்வேறு பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை
இந்த மாநாட்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சட்டம், தடயவியல், தொழில்நுட்பத் துறை நிபுணர்கள் பங்கேற்க உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து ஆதாரங்களைச் சேகரிப்பது, டிஜிட்டல் தடயவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விசாரணைகளை மேம்படுத்துவது, பயங்கரவாத வழக்குகளின் நீதிமன்ற விசாரணையை திறம்பட கையாள்வது உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன. மேலும், தீவிரவாத சிந்தனைகளைத் தடுப்பது, உளவு அச்சுறுத்தல்கள், பயங்கரவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் வளர்ந்து வரும் புதிய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளன.
காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பயிற்சி
மாநாட்டின் ஒரு பகுதியாக மாநில காவல்துறை அதிகாரிகள் மற்றும் தொழில்முறை வல்லுநர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த நிபுணர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. புதிய குற்றவியல் சட்டங்களை பயங்கரவாத வழக்குகளில் நடைமுறைப்படுத்துவது, டிஜிட்டல் ஆதாரங்களை நீதிமன்றத்தில் பயன்படுத்துவது, சாட்சிகளின் பாதுகாப்பு மற்றும் வழக்கு விசாரணை உத்திகள் உள்ளிட்டவை பயிற்சியில் இடம்பெற உள்ளன. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு, மத்திய மற்றும் மாநில விசாரணை அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதுடன், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான எதிர்காலத் திட்டங்களை உருவாக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

