கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது. மீறி நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்துள்ளது. தொடர்ந்து அனைத்து தேர்வுகளும் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 12-ம் தேதி முதல் விடுமுறை வழங்கப்பட்டது. நான்கு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 18-ம் தேதி தொடங்கியும், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 25-டம் தேதியிலிருந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் தனியார் பள்ளியில் நிர்வாகம் சார்பில் கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி வருவதாக புகார் இருந்துள்ளது. இந்த நிலையில் கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது. மீறி நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
இது அவர் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கைகள்; தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி , மெட்ரிக் பள்ளிகள் ( உயர்நிலை , மேல்நிலை ) சுயநிதி ( உயர்நிலை , மேல்நிலை ) பள்ளிகளுக்கு மே 1 முதல் ஜுன் 1-ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . கோடை விடுமுறை நாட்களில் எந்த பள்ளிகளும் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது என அனைத்து பள்ளி முதல்வர்கள் மற்றும் தாளாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்கள் பாதிக்கப்பட்டால் நடவடிக்கைக்காக தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு பரிந்துரைக்கப்படும் என முதல்வர்கள் மற்றும் தாளாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

