Dailyhunt
சோஷியல் மீடியாவில் போர்டிங் பாஸ் பகிர்கிறீர்களா..? ரொம்ப ஆபத்து.. விமான பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை..!

சோஷியல் மீடியாவில் போர்டிங் பாஸ் பகிர்கிறீர்களா..? ரொம்ப ஆபத்து.. விமான பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை..!

1News Nation 2 weeks ago

விமானப் பயணத்தின் மகிழ்ச்சியில் பலர் தங்களின் போர்டிங் பாஸ் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் இது கடுமையான தனியுரிமை மற்றும் மோசடி ஆபத்துகளை உருவாக்கும் என விமானப் போக்குவரத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

விமானத் துறையில் பயன்படும் போர்டிங் பாஸ் பார்கோடுகள் அனைத்தும் IATA BCBP (Bar Coded Boarding Pass) தரநிலையைப் பின்பற்றுகின்றன. இந்த பார்கோடுகளில் பயணியின் பெயர், PNR (முன்பதிவு குறியீடு), விமான விவரங்கள், இருக்கை எண் மற்றும் சில சமயங்களில் அடிக்கடி பயணிக்கும் தகவல்கள் போன்ற முக்கிய தரவுகள் இடம்பெற்றிருக்கும்.

விமான போக்குவரத்து நிபுணர் மற்றும் ஏர் இந்தியாவின் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரியான கே. அனுராதா சுரேஷ் கூறுகையில், பார்கோடு ஸ்கேன் செய்யப்படுவதன் மூலம் பயணியின் அடிப்படை தகவல்களை எளிதாக அணுக முடியும் என்றும், இது தவறான பயன்பாட்டுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

அவரது விளக்கப்படி, ஒரு போர்டிங் பாஸ் புகைப்படத்தில் தெரியும் PNR மற்றும் குடும்பப் பெயரை வைத்து சிலர் விமான நிறுவன இணையதளங்களில் உள்ள "Manage Booking" பகுதியில் நுழையக்கூடும். இதன் மூலம் இருக்கை மாற்றம், பயண ரத்து, உணவு விருப்ப மாற்றம் போன்றவற்றை கூட செய்ய முடியும் அபாயம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சில சந்தர்ப்பங்களில் பயணியின் முழுப் பயணத் திட்டம், தங்கும் இடம் மற்றும் திரும்பும் நேரம் போன்ற தகவல்களும் வெளிப்பட வாய்ப்பு இருப்பதால், இது அடையாளத் திருட்டு மற்றும் இலக்கு வைக்கப்பட்ட மோசடிகளுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் எச்சரிக்கிறார். முக்கியமாக, போர்டிங் பாஸ் புகைப்படத்தில் பயணத்தின் தேதி மற்றும் நேரம் தெளிவாக தெரிந்தால், ஒருவர் எப்போது வீட்டில் இல்லாமல் இருப்பார் என்பதை கூட குற்றவாளிகள் கணிக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இது வீட்டுத் திருட்டு அபாயத்தையும் அதிகரிக்கிறது.

இதனால், பயணிகள் சமூக வலைதளங்களில் போர்டிங் பாஸ் பகிர்வதை தவிர்க்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் பார்கோடு மற்றும் PNR தகவலை மறைத்து பதிவிட வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும், பயணத்திற்குப் பிறகு பயன்படுத்தப்பட்ட போர்டிங் பாஸ்களை முழுமையாக கிழித்து அகற்றுவது பாதுகாப்பான நடைமுறையாகும் என்றும் கூறப்படுகிறது.

: இன்று முதல் 5 கிலோ மினி எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா..?

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: 1News Nation