Thursday, 29 Mar, 11.59 am 4tamil News

முகப்பு
கின்னஸ் சாதனையில் இடம் பெற்ற 'விஷ்வகுரு' திரைப்படம்

ஏவிஏ ப்ரொடகபஷன்ஸ் நிறுவனத்தின் டாக்டர். ஏ.வி.அனுப் தயாரித்து இருக்கும் புதிய திரைப்படம் 'விஷ்வகுரு',

இப்படத்தின் மூலம் ஏவி. அனுப் மற்றும் அப்படத்தின் இயக்குநர் விஜேஷ் மணி புதிய கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் என எழுத்துப்பணிகள் முடிந்து ஹூட்டிங் ஆரம்பித்தது முதல் திரையிடல் வரையிலான அனைத்து பணிகளையும் 51 மணி நேரம் 2 நிமிடங்களில் வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள். இதனால் உலகிலேயே மிக வேகமாக எடுத்து முடிக்கப்பட்ட திரைப்படம் என்ற புதிய சாதனையை 'விஷ்வகுரு' படைத்திருக்கிறது.

இந்தியாவில் மாபெரும் சமூகச சீர்திருத்தங்களைக் கொண்டு வரக் காரணமாக இருந்தவரும், கேரளாவில் மதம், ஜாதிகளையெல்லாம் தாண்டி மாபெரும் சமூக சீர்திருத்தங்களை கொண்டு வந்து, ஆன்மீக சுதந்திரத்தையும் சமூக சமத்துவத்தையும் உருவாக்கிய 'ஸ்ரீ நாராயண குரு' அவர்களின் வாழ்க்கையைக் காட்டும் 'பயோபிக்' பிரிவிலான திரைப்படம்தான் 'விஷ்வகுரு'.

இதற்கு முன்பு 'மங்கள கமனா' [Mangala Gamana] என்ற இலங்கை திரைப்படம், 71 மணிநேரம் மற்றும் 10 நிமிடங்களில் எடுக்கப்பட்டதே சாதனையாக இருந்தது. வெறும் 51 மணிநேரம் மற்றும் 2 நிமிடங்களில் 'விஷ்வகுரு' எடுக்கப்பட்டிருப்பதால், உலகில் மிக வேகமாக எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற புதிய கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறது.

இப்படத்தின் எழுத்தாளர் ப்ரமோத் பையனூர் எழுத்துப்பணிகளை 27, டிசம்பர் 2017 அன்று முழுமையாக எழுதி முடித்த இரண்டு நாட்களிலேயே எடுத்து முடிக்கப்பட்டு, அதாவது 29 டிசம்பர் 2017 அன்று திருவனந்தபுரத்திலுள்ள 'நிலா திரையங்கில்' காலை 11.30 மணிக்கு திரையிடப்பட்டது.

'விஷ்வகுரு' திரைப்படத்தின் ஷூட்டிங் மட்டுடுமின்றி, படத் தலைப்பு முன்பதிவு, போஸ்ட்ப்ரொடகபஷன் பணிகள், சுவரொட்டிகளுக்கான வடிவமைப்பு, விளம்பரங்கள் மற்றும் தணிக்கை முதல் அனைத்துப் பணிகளும் இந்த மிகக்குறைவான மணி நேரங்களுக்குள்ளாகவே முடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.வி.அனுப், மலையாள சினிமாவில் பணியாற்றிய அனுபவமுள்ளவர். முழு அர்ப்பணிப்புடன் கூடிய மேடை நாடக நட்சத்திரம். இவர் 'விஷ்வகுரு' படம் பற்றி கூறுகையில்,

"இந்திய சினிமாவை உலகளாவிய சினிமாவில் குறிப்பிட்டு காட்டும் வகையில் ஒரு மைல் கல்லை எட்டவேண்டுமென்ற எண்ணத்தில் உருவானதுதான் இப்படம். ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட மணி நேரத்தில், மேடை நாடக நட்சத்திரங்களின் பங்களிப்புடன் இப்படத்தை எடுத்து முடித்திருக்கிறோம். நாங்கள் எதற்காக இப்படி ஒலு நல்ல முயற்சியுடன் இறங்கியிருக்கிறோம் என்பதை மக்கள் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்,'' என்றார்.

இப்படத்தின் இயக்குநர் விஜேஷ் மணி கூறுகையில்,

"நம் சினிமாவின் மீது உலகளாவிய ஒரு கவன ஈர்ப்பை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியின் வெளிப்பாடே 'விஷ்வகுரு'. உலகளவில் ஒரு தனித்துவமான முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென நினைத்த போது, நட்சத்திரங்கள், திரைப்படப் பணியாளர்கள் என அனைத்திலும் கைக்கொடுத்து அதை நிஜமாக்கிய ஏ.வி.அனுப் அவர்களுக்கு எங்களது மனப்பூர்வமான நன்றிகள்,'' என்றார்.

'விஷ்வகுரு' திரைப்படத்தில் புருஷோத்தமன் கைனக்கரா, காந்தியன் சிவராமன், கலாதரன், கலாநிலையம் ராமச்சந்திரன், ஹரிகிருஷ்ணன், கே.பி.ஏ.சி. லீலா கிருஷ்ணன், பி.குரியன், ஷெஜின், பேபி பவித்ரா, மாஸ்டர் ஷரன் ஆகிய நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேக்கப் ஆர்டிஸ்ட் பட்டனம் ரஷீத், கலை இயக்குநர் அர்கன். பின்னணி இசை கிளிமனூர் ராமவர்மா, படத்தொகுப்பு லிபின், தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர். ஷாகுல் ஹமீத், ஒளிப்பதிவு லோகநாதன் ஸ்ரீனிவாசன்,

இப்படத்தின் முக்கிய காட்சிகள் சிவகிரி மடத்திலும், அதற்கு அருகிலுள்ள முக்கிய இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளன.

Dailyhunt
Top