Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
2000-க்கு முன் பிறந்தவர்களா? பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பு..!

2000-க்கு முன் பிறந்தவர்களா? பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பு..!

ABP Nadu 2 weeks ago

நாகப்பட்டினம்: பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைச் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளர் மற்றும் தமிழ்நாடு முதன்மை பிறப்பு இறப்பு பதிவாளர் ஆகியோர் முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

இதன்படி பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பெயர் இல்லாத பிறப்புச் சான்றிதழ்களில் உடனடியாக பெயர் சேர்த்து புதிய சான்றிதழைப் பெற்றுக் கொள்ளுமாறு நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கால அவகாசம் நீட்டிப்பு

பொதுவாகக் குழந்தை பிறந்தவுடன் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ்களில் உடனடியாக பெயர் குறிப்பிடப்படாமல் விடுபட்டிருந்தால், அதனை குறிப்பிட்ட காலத்திற்குள் சேர்க்க வேண்டும் என்ற விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. இருப்பினும், பல குடும்பங்களில் பல்வேறு காரணங்களால் குழந்தைகளின் பெயர்கள் சான்றிதழில் சேர்க்கப்படாமல் காலதாமதம் ஆகிவிடுகிறது. இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், 2000-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும், அதேபோல் 2000-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்கு பிறகு பதிவு செய்யப்பட்டு 15 ஆண்டுகள் வரை கடந்த பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தையின் பெயரைச் சேர்ப்பதற்கான சிறப்பு அவகாசத்தை அரசு வழங்கியுள்ளது.

இந்தச் சலுகையைப் பயன்படுத்தி வரும் 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களது பெயர் விடுபட்ட பிறப்புச் சான்றிதழ்களில் பெயரினைச் சேர்த்துப் புதிய சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் கட்டணம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெயர் சேர்க்கப்படாமல் பிறப்புச் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி உடனடியாகச் சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவு மையங்களை அணுக வேண்டும். பெயர் சேர்ப்பதற்காகக் குழந்தையின் பள்ளி அல்லது கல்லூரி கல்விச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை அல்லது பிற அதிகாரப்பூர்வ அடையாளச் சான்றுகளில் தேவையான ஆவணங்களின் நகல்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தச் சேவையைப் பெறுவதற்குக் குறைந்தபட்ச தாமதக் கட்டணமாக ரூபாய் 200 செலுத்தி, முறைப்படி விண்ணப்பித்து பெயருடன் கூடிய புதிய பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணுக வேண்டிய மையங்கள்

பொதுமக்கள் தங்களின் வசதிக்கேற்ப மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களை அணுகி இச்சேவையைப் பெறலாம். அந்த வகையில், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மருத்துவ அமைப்புகளின் கீழ் செயல்படும் பிறப்பு இறப்பு பதிவு மையங்கள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா மற்றும் தலைமை அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் விண்ணப்பிக்கலாம். மேலும், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள பதிவுப் பிரிவுகளையும் நேரடியாகத் தொடர்புகொண்டு ஆவணங்களைச் சமர்ப்பித்து பயன்பெறலாம்.

மாவட்ட ஆட்சியரின் முக்கிய வேண்டுகோள்

பெயர் குறிப்பிடப்படாத பிறப்புச் சான்றிதழ்கள் எதிர்காலத்தில் கல்விச் சேர்க்கை, போர்ட் விண்ணப்பம், அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி வாய்ப்புகள் போன்ற எந்தவொரு அதிகாரப்பூர்வ தேவைகளுக்கும் பயன்படாது என்பதால், இதனைப் பொதுமக்கள் அலட்சியப்படுத்தாமல் செயல்பட வேண்டும். மாவட்ட மக்கள் அனைவரும் இந்த இறுதி வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்தி, குறித்த காலத்திற்குள் பெயர் இல்லாத பிறப்புச் சான்றிதழ்களில் பெயர் சேர்த்துப் பயன்பெற வேண்டும் என்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே. ஜே.பிரவீன் குமார், கேட்டுக்கொண்டுள்ளார்.

Author : எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu