Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஆண்ட்ராய்டு போன் இருந்தால் போதும்... ஊக்கத்தொகையுடன் அரசு பணி!

ஆண்ட்ராய்டு போன் இருந்தால் போதும்... ஊக்கத்தொகையுடன் அரசு பணி!

ABP Nadu 1 day ago

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் காரிப் பருவத்திற்கான மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் கிராம அளவில் உள்ள படித்த இளைஞர்கள், பெண்கள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களை இணைத்துக் கொண்டு பயன்பெறலாம் என்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே. ஜே. பிரவீன் குமார், தெரிவித்துள்ளார். நவீன தொழில் நுட்பத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் இத்திட்டம், விவசாயத் துறைக்கும் விவசாயிகளுக்கும் இடையே ஒரு முக்கிய பாலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டு முயற்சியில் டிஜிட்டல் சர்வே பணிகள்

மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் நடைபெற்று வரும் இந்த பயிர் கணக்கெடுப்புப் பணியில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகத் துறை, அட்மா திட்டம் மற்றும் பயிர் அறுவடை பரிசோதனையாளர்கள் ஆகியோர் இணைந்து கூட்டு முயற்சியாக செயல்பட்டு வருகின்றனர்.

கள அளவில் நிலங்களின் தன்மையை நேரடியாக ஆய்வு செய்து தரவுகளைச் சேகரிக்கும் பணி முழு வீச்சில் முடுக்கப்பட்டுள்ளது. நவீன கால கட்டத்திற்கு ஏற்ப வேளாண்மைத் துறையை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கத்தோடு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

செயலி மூலம் துல்லியமான நில அமைவிடம்

இப்பணியில் ஈடுபடுபவர்கள் தங்களிடம் உள்ள ஆண்ட்ராய்டு ரக கைபேசியில் 'கிராப் சர்வே' (Crop Survey) என்ற பிரத்யேக செயலியை பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர். பின்னர் சாகுபடி செய்யப்பட்டுள்ள விளைநிலங்களுக்கு நேரடியாகச் சென்று, ஜி.பி.எஸ் (GPS) தொழில்நுட்பத்தின் உதவியோடு நிலத்தின் அமைவிடம் மற்றும் பயிர்களின் புகைப்படங்களை துல்லியமாக பதிவேற்றம் செய்கின்றனர். இதனால் ஒவ்வொரு குறிப்பிட்ட நிலப் புலனிலும் விவசாயிகள் என்னென்ன பயிர்களை சாகுபடி செய்துள்ளனர் என்ற விவரம் அரசின் தரவுத்தளத்தில் மிகத் துல்லியமாகப் பதிவாகிறது.

வேளாண் திட்டங்களும் இயற்கை இடர்பாடுகளும்

இவ்வாறு சேகரிக்கப்படும் துல்லியமான தரவுகள், வேளாண்மைத் துறை சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களை முறையான பயனாளிகளுக்குக் கொண்டு சேர்ப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். மேலும் வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் மற்றும் இடர்பாடுகளின் போது பயிர் சேதங்களை மிக விரைவாகவும் துல்லியமாகவும் கணக்கீடு செய்ய இது பெருமளவில் உதவுகிறது. பயிர்க் கடன்கள் வழங்குவதில் எந்தெந்தப் பகுதிகள் மற்றும் எந்தெந்த நிலங்கள் தகுதியானவை என்பதை அரசு எளிதில் கண்டறிய இத்தரவுகள் வழிவகுக்கின்றன.

உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மேலாண்மை

மின்னணு பயிர் கணக்கெடுப்பின் மூலம் கிடைக்கும் நிலப்புலன்களின் பரப்பளவு மற்றும் பயிர் வகைகளின் வரையறைக்கு ஏற்ப, எந்த அளவுக்கு உரம் மற்றும் பூச்சி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வேளாண் வல்லுநர்கள் விவசாயிகளுக்குச் சரியாக அறிவுறுத்த முடியும். இது மண்ணின் வளத்தைப் பாதுகாப்பதோடு, விவசாயிகளுக்கு வீண் விரயத்தைக் குறைத்து அதிக மகசூலைப் பெறவும் உதவி செய்கிறது. இதனால் இந்த மின்னணு பயிர் கணக்கீட்டுப் பணியானது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கும், விவசாயப் பெருமக்களுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

தன்னார்வலர்களுக்கான முன்பதிவு மற்றும் ஊக்கத்தொகை

கிராமப்புறங்களில் உள்ள ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருக்கும் படித்த இளைஞர்கள், படித்த பெண்கள் மற்றும் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் இச்சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் 'உழவன்' செயலியில் உள்ள தன்னார்வ பயிர் கணக்கெடுப்பாளர் பதிவுப் பகுதிக்குச் சென்று தங்கள் விவரங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். டிஜிட்டல் பயிர் சர்வே பணியை வெற்றிகரமாக மேற்கொள்ளும் தன்னார்வலர்களுக்கு, அவர்கள் கணக்கெடுக்கும் ஒரு உட்பிரிவு நிலத்திற்கு ஏற்ப உரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.

வங்கி கணக்கில் நேரடி வரவு

இதன்படி, நடப்பு தரிசு நிலத்திற்கு ரூ.3, முதன்மை பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலத்திற்கு ரூ.5 மற்றும் கூடுதல் பயிர் (Multi Crop) சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலத்திற்கு அதிகபட்சமாக ரூ.9 வரை ஊக்கத்தொகையாக அளிக்கப்படும். தன்னார்வலர்கள் கணக்கீடு செய்யும் நிலப் புலன்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அதற்கான தொகையானது நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் மின்னணு முறையில் வரவு வைக்கப்படும். எனவே தகுதியும் ஆர்வமும் உள்ள இளைஞர்கள் உடனடியாக தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு இத்திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தனது செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Author : எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu