டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்து ஜோஸ் பட்லர் வரலாறு படைத்துள்ளார். ஐபிஎல் 2026 தொடரின் 14-வது லீக் போட்டி டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில், பட்லர் தனது டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் 600 சிக்ஸர்கள் என்ற முக்கிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்தார். இதன் மூலம், பல ஜாம்பவான்கள் இடம்பெற்றுள்ள பட்டியலில் பட்லரும் இணைந்துள்ளார்.
இந்த வரிசையில் பட்லருக்கு மேல் மேற்கிந்தியத் தீவுகளின் நிக்கோலஸ் பூரன் உள்ளார். பூரன் தனது டி20 வாழ்க்கையில் இதுவரை 712 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இந்தப் பட்டியலில் மேலும் மேலே சென்றால், ஆண்ட்ரே ரசல், கீரோன் பொல்லார்ட் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோரின் பெயர்கள் வருகின்றன. கிறிஸ் கெய்ல் தனது டி20 வாழ்க்கையில் 1,056 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். 1,000 சிக்ஸர்களைக் கடந்த ஒரே வீரர் கெய்ல் மட்டுமே.
டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த 7 பேட்ஸ்மேன்கள்:
கிறிஸ் கெய்ல் – 1,056 சிக்ஸர்கள்
கீரோன் பொல்லார்ட் – 982 சிக்ஸர்கள்
ஆண்ட்ரே ரசல் – 784 சிக்ஸர்கள்
நிக்கோலஸ் பூரன் – 712 சிக்ஸர்கள்
ஜோஸ் பட்லர் – 600 சிக்ஸர்கள்
அலெக்ஸ் ஹேல்ஸ் – 595 சிக்ஸர்கள்
கொலின் முன்ரோ – 582 சிக்ஸர்கள்
பட்லரின் அதிரடி ஆட்டம்
இந்த போட்டியில் மூன்றாவது வீரராகக் களமிறங்கிய ஜோஸ் பட்லர், 27 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். பட்லரின் இந்த இன்னிங்ஸ் குஜராத் அணிக்குச் சிறந்த தொடக்கத்தைப் பெற உதவியது.
இந்தத் தொடரின் கடந்த இரண்டு போட்டிகளில் பட்லர் ஃபார்ம் இல்லாமல் தவித்து வந்தார். பஞ்சாபிற்கு எதிரான முதல் போட்டியில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ராஜஸ்தானுக்கு எதிராக 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். தற்போது டெல்லிக்கு எதிரான போட்டியில், கடந்த இரண்டு போட்டிகளாக அவர் தேடிக்கொண்டிருந்த ஃபார்மை மீண்டும் கண்டறிந்துள்ளார்.
ஜோஸ் பட்லரின் டி20 புள்ளிவிவரங்கள்
பட்லரின் டி20 வாழ்க்கையைப் பொறுத்தவரை, அவர் இதுவரை 495 போட்டிகளில் விளையாடியுள்ளார். 466 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ள பட்லர், 34.94 சராசரி மற்றும் 146.11 ஸ்டிரைக் ரேட்டில் 13,909 ரன்கள் குவித்துள்ளார். இதில் 8 சதங்கள் மற்றும் 98 அரைசதங்கள் அடங்கும்; அவரது அதிகபட்ச ஸ்கோர் 124 ஆகும்.
Author : ஜேம்ஸ்

