Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அடிப்படை வசதி இல்லை.. மகளிர் உரிமைத்தொகை இல்லை! மண்திட்டு கிராம மக்கள் வாழ்வில் ஒளியேற்றுவாரா விஜய்?

அடிப்படை வசதி இல்லை.. மகளிர் உரிமைத்தொகை இல்லை! மண்திட்டு கிராம மக்கள் வாழ்வில் ஒளியேற்றுவாரா விஜய்?

ABP Nadu 2 weeks ago

மிழ்நாடு இன்று பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்து வந்தாலும், இன்று பல கிராமங்களில் அடிப்படை வசதிகளே இல்லாமல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அதில் மிகவும் குறிப்பிடத்தக்க கிராமமாக கருதப்படுவது மண்திட்டு கிராமம்.

மலைவாழ் கிராமம்:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனிக்கு அருகே இந்த மலைவாழ் கிராமம் அமைந்துள்ளது. அமராவதி அணை அருகே அமைந்துள்ள இந்த கிராமத்தினர் வாழ்க்கை எந்தவொரு வளர்ச்சியும் இல்லாத நிலையில் உள்ளது. இந்த கிராமத்தில் வெறும் 30 குடும்பங்கள் வசித்து வருகிறது.

மிக மிக குறைவான எண்ணிக்கையில் வசித்து வரும் இந்த மக்கள் குறைவான அளவிலே வசித்து வருகின்றனர். இவர்கள் மலையின் அடிவாரத்தில் வன விலங்குகளின் அச்சுறுத்தலுக்கு நடுவில் வசித்து வருகின்றனர்.

அடிப்படை வசதி இல்லாத சூழல்:

இந்த கிராமத்தில் உள்ள 20 குடும்பங்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. இதர குடும்பங்களுக்கு இன்னும் வீடுகள் கட்டித்தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் இன்னும் தார்ப்பாயில் அமைக்கப்பட்ட கூடாரங்களையே தங்களது வீடுகளாக கட்டமைத்து வசித்து வருகின்றனர். இவர்கள் காட்டுப் பகுதியில் வசித்து வரும் சூழலில், இவர்களுக்கு போதுமான வசதிகளை செய்து தருவதிலும் அரசுக்கு சிரமம் உருவாகியுள்ளது.

இன்னும் வராத மகளிர் உரிமைத்தொகை:

இங்கு குழந்தைகளுடன் இந்த மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் வசித்து வருகின்றனர். வெயில், மழை காலங்களில் இந்த மக்கள் இதே பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த பகுதியிலும், அரசு வீடுகள் கட்டிகொடுத்த பகுதியில் வசிக்கும் பலருக்கும் தற்போது வரை மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூபாய் 1000 கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு ஏதுவாக அரசு அருகிலே பள்ளிகள் கட்டித்தந்துள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் சிலர் சிரமங்களுக்கு மத்தியிலும் கல்லூரி சென்று படித்து வருகின்றனர். இந்த சூழலில், அரசின் மகளிர் உரிமைத் தொகை தங்களுக்கும் கிடைத்தால் மிகவும் பயன் அளிக்கும் என்று அந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அடிப்படை வசதி இல்லாமலே வசித்து வரும் இந்த மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் சுற்றியுள்ள தோட்டங்களுக்கு கூலி வேலைக்கு சென்று அதன்மூலம் கிடைக்கும் வருவாய் மூலமாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

தவெக ஆட்சியில் கிடைக்குமா?

இந்த சூழலில், கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் பலன்கள் இந்த ஆட்சியிலாவது தங்களை வந்து சேராதா? என்று ஏக்கத்துடன் உள்ளனர். மேலும், அந்த கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் மகளிர் உரிமைத் தொகை. மாதந்தோறும் ரூபாய் 1000 உரிமைத்தொகையாக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் வழங்குவதே இந்த திட்டம் ஆகும். இந்த திட்டம் மூலமாக தமிழ்நாட்டில் 1.30 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

Author : சுகுமாறன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu