கிரிமினல்கள் நிரம்பிய அமைச்சரவை கொண்ட தமிழக வெற்றிக் கழகத்திற்கு திமுகவை கேள்வி கேட்க அருகதை இல்லை என திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் விஜயை அவதூறாக பேசியதாக முன்னாள் திமுக அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் 10 நாட்கள் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கைது நடவடிக்கை தவெக அரசு மீது திமுகவுக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பலரும் முதலமைச்சர் விஜய்க்கும்,தமிழக அரசுக்கும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ஆட்சிக்கு வந்து 55 நாட்களை கடந்தாலும் நிர்வாகத்தை பற்றி கவலைப்படாத தவெக அரசு தினந்தோறும் திமுக மீது எந்த குற்றத்தை சுமத்தலாம் என்று சிந்தித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதைகளை அரங்கேற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அவதூறு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் கைது நடவடிக்கை அமைந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும், “பொதுவாக அவதூறு வழக்கில் கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்கிற போது காவல்துறை கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன? என கேள்வியெழுப்பிய பரந்தாமன், 6 மணி நேரம் விசாரணை எதற்காக நடைபெற்றது? காவல்துறை விசாரணையின் மர்மம் என்ன?” என்று அடுக்கடுக்கான கேள்விகளையும் முன்வைத்தார். அதுமட்டுமல்லாமல் அனைவரும் எதிர்பார்த்த சூழலில் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைய காவல்துறை தன்னை வற்புறுத்தியதாக அனிதா ராதாகிருஷ்ணனே பேட்டியளித்தார். இதற்கு தான் காவல்துறை விசாரணையா?” எனவும் பரந்தாமன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தவெகவில் சேர்ந்த இரண்டே நாளில் விஜயகருக்கு ஷாக்.! கெடு விதித்த நீதிமன்றம்
தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவிலேயே அரசியலுக்கு முன்மாதிரி மாநிலம் தமிழ்நாடுதான். ஆனால், இன்று மோசமான அரசியலை நோக்கி அது சென்று கொண்டிருக்கிறது.ஒரு அரசியல் கட்சி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் தவெக தான். தாங்கள் ஆளும் பல்வேறு மாநிலங்களில் பிற கட்சித் தலைவர்களை அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி கட்சியில் இணையுமாறு பாஜக வற்புறுத்தியதாக பலரும் குற்றம்சாட்டியதை நாம் ஊடகங்களில் பார்த்திருப்போம். தற்போது தவெகவும் அதே பாணியைதான் கையில் எடுத்துள்ளது.
அனிதா ராதாகிருஷ்ணனை ரவுடி என்று கூறிய அமைச்சர் நிர்மல்குமார் ஒரு 420. கிரிமினல்களை கொண்ட கேபினட்டை தவெக அரசு வைத்துள்ளது. உங்கள் மேல் உள்ள குற்றச்சாட்டுகளை தவறு என்றோ அல்லது நாங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது என்றோ நிரூபியுங்கள். அதை விட்டுவிட்டு, தனிமனித தாக்குதல் நடத்துவது இது எப்படி பட்ட அரசு என்பதை காட்டுகிறது எனவும் பரந்தாமன் கடுமையாக சாடியுள்ளார்.
Author : பேச்சி ஆவுடையப்பன்

