Tamil Nadu Assembly Election Results: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், அரசியல் களத்தில் செல்வாக்கு மிக்க குடும்பங்களைச் சேர்ந்த பல வாரிசுகள் மற்றும் உறவினர்களின் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்தத் தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன், கணவன், மனைவி மற்றும் சகோதரிகள் எனப் பலரும் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்டனர். இதில் சில குடும்பங்களுக்கு இரட்டை மகிழ்ச்சியும், சிலருக்குப் பெரும் அதிர்ச்சியும் காத்திருந்தது. குறிப்பாக, முதலமைச்சர் குடும்பத்திலேயே முடிவுகள் நேர்மாறாக அமைந்துள்ள செய்தி அரசியல் வட்டாரத்தை உலுக்கியுள்ளது.
கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி - சேப்பாக்கத்தில் உதயநிதி வெற்றி
இந்தத் தேர்தலின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் அதிர்ச்சியூட்டும் முடிவாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியின் நிலவரம் அமைந்துள்ளது. அத்தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தோல்வியைத் தழுவியுள்ளார். இருப்பினும், அவரது மகனும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கம் தொகுதியில் களம் கண்டு பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளார். தந்தையின் தோல்வியும், மகனின் வெற்றியும் ஆளுங்கட்சித் தரப்பில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் லாட்டரி அதிபர் மார்ட்டின் குடும்பத்தினர்
திண்டுக்கல் மாவட்டத்தில் தனது கோட்டையைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர் ஐ. பெரியசாமி. ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட அவரது மகன் செந்தில்குமாரும் அபார வெற்றி பெற்று, தந்தை-மகன் என இருவருமே சட்டமன்றத்திற்குத் தேர்வாகியுள்ளனர்.
அதேபோல், லாட்டரி அதிபர் மார்ட்டின் குடும்பத்தினர் மூன்று வெவ்வேறு இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளனர். மார்ட்டினின் மகள் டெய்சியின் கணவர் ஆதவ் அர்ஜுனா, த.வெ.க. சார்பில் வில்லிவாக்கத்திலும், மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் அ.தி.மு.க. சார்பில் லால்குடியிலும், மகன் ஜோஸ் சார்லஸ் புதுச்சேரி காமராஜர் நகரிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.
சகோதரிகளின் வீழ்ச்சியும் அண்ணன் - தம்பி மோதலும்
முன்னாள் மத்திய இணை அமைச்சர் தலித் எழில்மலையின் மகள்களுக்கு இந்தத் தேர்தல் பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளதாகத் தெரிகிறது. அவரது ஒரு மகள் எழில் கரோலின் வி.சி.க. சார்பில் அரக்கோணத்திலும், மற்றொரு மகள் எழில் கேத்தரின் த.வெ.க. சார்பில் மதுராந்தகத்திலும் போட்டியிட்ட நிலையில், இருவருமே தோல்வியைத் தழுவினர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடந்த குடும்பப் போராட்டத்தில், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தற்போதைய எம்.எல்.ஏ மகாராஜன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அவரது தம்பி லோகிராஜன் தோல்வியடைந்தார்.
தே.மு.தி.க தலைமைக்குக் கிடைத்த கலவையான முடிவுகள்
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியைத் தன்வசமாக்கிக் கொண்டார். இது அக்கட்சியினருக்கு உற்சாகத்தைத் தந்தாலும், விருதுநகர் தொகுதியில் களம் கண்ட அவரது மகன் விஜய பிரபாகரன் தோல்வியைத் தழுவியது குடும்பத்தினருக்கும் தொண்டர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இவ்வாறு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், மக்கள் சிலருக்குப் பட்டாபிஷேகம் செய்தும், சிலருக்குத் தோல்வியைப் பரிசளித்தும் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
Author : கிஷோர்

