மயிலாடுதுறை: மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பில் ஏற்பட்ட இழுபறியும், அதைத் தொடர்ந்து வெடித்த உட்கட்சி பூசலும் ஒரு வழியாக சமரசத்தில் முடிவடைந்தது.
"மண்ணின் மைந்தருக்கே வாய்ப்பளிக்க வேண்டும்" என முழக்கமிட்டு, எம்பி சுதாவிற்கு எதிராக கருப்புக் கொடி காட்ட போறோம் என கூறிய அதிருப்தி கோஷ்டியினர், இறுதியில் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
நீடித்த இழுபறியும் வேட்பாளர் அறிவிப்பும்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. தொகுதி பங்கீடு முடிந்து பல நாட்கள் கடந்த நிலையிலும், வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட கடும் போட்டியால் அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. பல்வேறு பெயர்கள் அடிபட்ட நிலையில், நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த ஒய்.எஸ். ஜமால் முகமது யூனூஸ் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
பொங்கியெழுந்த 'மண்ணின் மைந்தன்' கோரிக்கை
வேட்பாளர் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே மயிலாடுதுறை காங்கிரஸில் சலசலப்பு தொடங்கியது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதா மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்று எம்பியாக இருந்தபோதிலும், தற்போது சட்டமன்றத் தேர்தலிலும் தொகுதிக்குத் தொடர்பில்லாத ஒருவரை (வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்) தலைமை அறிவித்திருப்பது உள்ளூர் நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து நேற்று மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி அலுவலகமான காமராஜர் மாளிகையில் கட்சியின் ஒரு பிரிவினர் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினர். "தொடர்ச்சியாக மயிலாடுதுறை தொகுதியை வெளியூர்க்காரர்களுக்குத் தாரை வார்ப்பதா?" என்று கேள்வி எழுப்பிய அவர்கள், இதற்குப் பரிந்துரை செய்த எம்பி சுதாவைக் கண்டித்து அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
"மயிலாடுதுறை மண்ணின் மைந்தர்களுக்குத் தகுதியே இல்லையா? மீண்டும் ஒரு வெளியூர் வேட்பாளரைத் திணிப்பதை ஏற்க முடியாது. எம்பி சுதா மயிலாடுதுறைக்கு வரும்போது அவருக்குக் கருப்புக் கொடி காட்டி எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்வோம்," என ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்ரோஷமாக முழக்கமிட்டனர்.
கருப்புக் கொடி போராட்டமும் திடீர் திருப்பமும்
காமராஜர் மாளிகை வளாகமே போராட்டத்தால் போர்க்களமாகக் காட்சியளித்த நிலையில், அறிவிக்கப்பட்ட வேட்பாளர் ஜமால் முகமது யூனூஸ் மற்றும் எம்பி சுதா ஆகியோர் கார் மூலம் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பதற்றம் தொற்றிக் கொண்டது. ஆனால், எதிர்பாராத திருப்பமாக, சற்று முன் வரை கருப்புக் கொடி காட்டுவோம் என்று கோஷமிட்ட அதே தொண்டர்கள், வேட்பாளர் ஜமால் முகமது மற்றும் எம்பி சுதா ஆகியோரைக் கண்டவுடன் சாந்தமடைந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு பிரிவினர், தலைமை எடுத்த முடிவுக்குக் கட்டுப்படுவதாகக் கூறி, வேட்பாளருக்குச் சால்வை அணிவித்து, பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் அப்பகுதியில் நிலவிய பரபரப்பு நீங்கி சுமுகமான சூழல் ஏற்பட்டது.
வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
தொடர்ந்து காமராஜர் மாளிகையில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய நிர்வாகிகள், "தனிப்பட்ட முறையில் அதிருப்தி இருந்தாலும், ராகுல் காந்தியின் கைகளை வலுப்படுத்தவும், மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யவும் நாம் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்" என வலியுறுத்தினர்.
எம்பி சுதா அளித்த விளக்கம்
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மயிலாடுதுறை எம்பி சுதா கூறியதாவது; "மயிலாடுதுறை தொகுதிக்குத் தகுதியான வேட்பாளரைத் தேர்வு செய்வதில் காங்கிரஸ் தலைமை மிகுந்த கவனத்துடன் செயல்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் விருப்பப்படி, சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜமால் முகமது யூனூஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இவர் ஒரு சாதாரண வெளியூர் நபர் அல்ல; பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். கட்சியின் கொள்கைகளை நன்கு அறிந்தவர். தொண்டர்களிடையே சிறு மனக்கசப்புகள் இருப்பது ஜனநாயக ரீதியானதே. அவர்கள் இப்போது வேட்பாளரை ஏற்றுக்கொண்டு களப்பணியைத் தொடங்கிவிட்டனர். இந்தத் தொகுதியில் காங்கிரஸ் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி," என்றார்.
அரசியல் பின்னணி
மயிலாடுதுறை தொகுதியில் சிறுபான்மையின வாக்குகளும், பாரம்பரிய காங்கிரஸ் வாக்குகளும் அதிகம் என்பதால், ஜமால் முகமது யூனூஸின் வருகை தேர்தல் களத்தை சூடாக்கியுள்ளது. தொடக்கத்திலிருந்த எதிர்ப்பு தற்போது மறைந்ததாகத் தோன்றினாலும், தேர்தல் பிரசாரத்தின் போது உள்ளூர் நிர்வாகிகள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்பதைப் பொறுத்தே காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மயிலாடுதுறையில் நடந்த இந்த 'எதிர்ப்பு மற்றும் வரவேற்பு' நிகழ்வு தேர்தல் நெருங்கும் வேளையில் மற்ற கட்சிகளிடை யேயும் உற்று நோக்கப்பட்டு வருகிறது.
Author : எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை

