Dailyhunt
Assembly Elections 2026: மாற்றம் நிகழுமா? - அசாம், கேரளா, புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு

Assembly Elections 2026: மாற்றம் நிகழுமா? - அசாம், கேரளா, புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு

ABP Nadu 3 days ago

2026ம் ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவானது நடைபெறும் நிலையில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு ஏப்ரல் 9ம் தேதியும் தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 23ம் தேதியும், மேற்கு வங்கத்திற்கு இரண்டு கட்டமாக ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் புதுச்சேரி, அசாம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த மூன்று மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்ற பிரச்சாரம் ஏப்ரல் 7ம் தேதியுடன் நிறைவடைந்தது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அமைதியாக மக்கள் வாக்களிப்பதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கான போதுமான முன்னேற்பாடுகளையும் பாதுகாப்பினையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதற்றமான தொகுதிகள் முழுக்க துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கேரள சட்டமன்ற தேர்தல்

கேரளாவை பொறுத்தவரை அங்கு இருக்கும் 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. களத்தில் 883 வேட்பாளர்கள் உள்ள நிலையில் அங்கு கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இரண்டு முறையும் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியில் இருந்து வருகிறது. இந்த முறையும் அந்த கட்சி வென்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதே சமயம் ஆளும் கட்சிக்கு எதிராக ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆகியவையும் களத்தில் இறங்கி உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கேரளாவில் இன்று நடைபெற உள்ள தேர்தலில் 1.32 கோடி ஆண் வாக்காளர்களும் 1.39 கோடி பெண் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளார்கள்.

அசாம் சட்டமன்ற தேர்தல்

அசாம் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கு 126 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஹிமந்த பிஸ்மா சர்மா தலைமையிலான பாஜக மற்றும் கௌரவ் கோகாய் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவும் நிலையில் அம்மாநிலத்தில் 2.49 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்ற உள்ளனர்.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்

புதுச்சேரியை பொறுத்தவரை மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 294 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். அங்கு 9.50 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். புதுச்சேரியை பொறுத்தவரை ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி, வைத்திலிங்கம் தலைமையிலான காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்த முறை புதிதாக களம் கண்டுள்ள விஜயின் தமிழக வெற்றி கழகம் களமிறங்குவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Author : பேச்சி ஆவுடையப்பன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu