கரூர் கூட்ட நெரிசல் - 41 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் திமுக- அதிமுக என இரு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நடிகர் விஜய் தலைமையிலான தவெக என்ற கட்சி கடந்த 2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதனையடுத்து நடைபெற்ற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து தவெக களம் இறங்கியது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்கும் வகையில் தவெக தலைவர் விஜய் திட்டமிட்டார். அந்த வகையில் கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாமக்கல் மற்றும் கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்வில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டார். அப்போது மதியம் 12 மணிக்கு விஜய் பொதுமக்களை சந்தித்து பேசுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு 7 மணியளவில் தான் சம்பவ இடத்திற்கே விஜய் வந்தார். இதனால் அளவுக்கு அதிகமாக கூட்டம் சேர்ந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயரிழந்தனர்.
41 பேருக்கு அரசு வேலை
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தவெக சார்பாக 20 லட்சம் ரூபாய் நிதி உதவியும், தமிழக அரசு சார்பாக 10 லட்சம் ரூபாயும் நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் நாளை கரூர் செல்லும் முதலமைச்சர் பல்வேறு அரசு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். அப்போது கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்கவுள்ளார். இதனையடுத்து உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை சேர்ந்த 32 பேருக்கு அரசு வேலை வழங்கவுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் தவெக அரசு அமைக்க ஆதரவு கொடுத்துள்ள முக்கிய கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிகார துஷ்பிரயோகம் என விமர்சித்துள்ளது.
சிஎம் விஜய் முடிவிற்கு கம்யூனிஸ்ட் எதிர்ப்பு
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சுப்ராயன் வெளியிட்டுள்ள பதிவில், அரசியல் கட்சிகளால் ஏற்பாடு செய்து நடத்திய கூட்ட நெரிசல்களில் ஏற்படும் மரணங்களுக்கு, அரசு வேலை வழங்கும் முடிவு கடுமையான பின்விளைவுகளைத் தோற்றுவிக்கும்! இந்த முடிவை அதிகாரத்துஷ்பிரயோகம் என்றே வரலாறு பதிவு செய்யும்! மேலும் எதிர்காலத்தில் அரசிற்கு கடும் நெருக்கடிகளை இந்த முடிவு ஏற்படுத்தும்!
இழப்பை ஈடுகட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் சம்பந்தப்பட்ட கட்சிகளைச் சார்ந்ததாகும்! அவைதான் அதை செய்ய வேண்டும்! அதை செய்வதற்கு முழுத்தகுதி படைத்த கட்சிதான் தவெக! அந்தப் பொறுப்பை நிறைவேற்றி முடிக்காமல் தட்டிக் கழித்துவிட்டு, அதை, அரசின் தலையில் சுமத்துவதை ஜனநாயக அரசியல் அமைப்பு ஏற்காது! தவெக அரசு ஆழமாக சிந்திக்க வேண்டும்! என சுப்ராயன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Author : கு. அஜ்மல்கான்

