Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பைக் பயணம்... தரையில் அமர்ந்து குறைகேட்பு: விக்கிரவாண்டியில் அமைச்சர் என். ஆனந்த் எளிமை!

பைக் பயணம்... தரையில் அமர்ந்து குறைகேட்பு: விக்கிரவாண்டியில் அமைச்சர் என். ஆனந்த் எளிமை!

ABP Nadu 1 week ago

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டமும், அதற்கு முன்னதாக அவர் காட்டிய எளிமையான அணுகுமுறையும் தற்போது பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

கோவில் வழிபாடு மற்றும் திடீர் ஆய்வு:

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சரின் தலைமையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தந்த நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை பகுதியில் முதலில் சாமி தரிசனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, வி.சாலை பகுதியில் வி.பி.ஜி. ராம்ஜி திட்டத்தின்கீழ் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்தப் பணிகளை நேரடியாக ஆய்வு செய்ய அமைச்சர் முடிவு செய்தார்.

இருசக்கர வாகனத்தில் பயணம்:

அமைச்சர் என்ற ஆடம்பரம் ஏதுமின்றி, விக்கிரவாண்டி தென்மேற்கு மாவட்டச் செயலாளர் வடிவேலுடன் இணைந்து, அமைச்சர் என். ஆனந்த் இருசக்கர வாகனத்திலேயே (பைக்) ஏரி மற்றும் கிராமப்புற திட்டப் பணிகள் நடைபெறும் இடத்திற்குச் சென்றார். அமைச்சரின் இந்த திடீர் பைக் பயணம் அங்கிருந்த தொண்டர்களையும் பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மக்களுடன் மக்களாக... தரையில் அமர்ந்த அமைச்சர்:

திட்டப் பணிகள் நடைபெறும் இடத்திற்குச் சென்ற அமைச்சர், அங்கு வி.பி.ஜி. ராம்ஜி திட்டத்தின்கீழ் வேலை செய்துகொண்டிருந்த வயதான பெண் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தான் ஒரு மாநில அமைச்சர் என்ற எந்தவித கர்வமும் காட்டாமல், அங்கிருந்த வயதான பெண்களுடன் தரையில் சாதாரணமாக அமர்ந்தார்.

அவர்களோடு சமமாக அமர்ந்து, திட்டப் பணிகள் முறையாக நடக்கிறதா, தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவிகள் மற்றும் ஊதியங்கள் சரியாகக் கிடைக்கிறதா என்று கேட்டறிந்தார். மேலும், அவர்களின் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் கிராமப்புற மக்களின் குறைகளையும் மிகவும் கனிவோடு கேட்டறிந்து, அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

பொதுமக்கள் பாராட்டு:

அரசு உயர் பதவியில் இருக்கும் ஒரு அமைச்சர், பாதுகாப்புப் பட்டாளங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் வந்து, தங்களோடு தரையில் அமர்ந்து குறைகளைக் கேட்டதை அங்கிருந்த வயதான பெண்கள் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டனர்.

அமைச்சரின் இந்த எளிமையான செயலும், மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்த அணுகுமுறையும் சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் வெளியாகி, தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துப் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

Author : சிவரஞ்சித்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu