தஞ்சாவூர்: மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான பிஎஃப் அலுவலகத்தில் உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் (Assistant Provident Fund Commissioner - APFC) பதவிக்கு 80 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி மேற்கொள்கிறது. தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
80 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு
அறிவிப்பின்படி, உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் பதவிக்கு மொத்தம் 80 பணியிடங்கள் உள்ளன. மத்திய அரசு பணியில் அதிகாரி நிலையில் பணியாற்ற விரும்புவோருக்கு இந்தப் பணி முக்கியமான வாய்ப்பாக அமைந்துள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.56,100 முதல் அதிகபட்சமாக ரூ.1,77,500 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் விண்ணப்பிக்கலாம் என்று தெரியுங்களா?
இந்தப் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அதாவது, குறிப்பிட்ட ஒரு பாடப்பிரிவில் மட்டுமே பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. பல்வேறு பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
மேலும், நிறுவனச் சட்டம், தொழிலாளர் சட்டங்கள் அல்லது பொது நிர்வாகம் ஆகியவற்றில் டிப்ளமோ படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு என்ன தெரியுங்களா?
விண்ணப்பதாரர்களின் வயது 11.09.2026 தேதியின்படி 35 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
இந்தப் பணிக்கான தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதற்கட்டமாக எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இதில் தகுதி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் உள்ளிட்ட விதிமுறைகளின் அடிப்படையில் இறுதி தேர்வு நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ.25 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க செப்டம்பர் 11 கடைசி நாள்
தகுதியுடையவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். www.upsc.gov.in என்ற யுபிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 11.09.2026 ஆகும்.
விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வித்தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு, தேர்வு முறை, கட்டணம் உள்ளிட்ட அனைத்து நிபந்தனைகளையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் முழுமையாக சரிபார்த்துக் கொள்ள வேண்டும். முழுமையான விவரங்களை யுபிஎஸ்சி இணையதளத்தின் Recruitment – Advertisement பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.
பட்டப்படிப்பு முடித்துவிட்டு மத்திய அரசு அதிகாரி பணியை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு முக்கியமான வாய்ப்பாக அமைந்துள்ளதால், கடைசி நாளை எதிர்பார்க்காமல் விண்ணப்பிப்பது பயனுள்ளதாக இருக்கும். இதுபோன்ற வாய்ப்புகள் அமைவது கடினம். அதிர்ஷ்ட காற்று வீசும் போதே அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்வில் முன்னேற்றம் அடைய முடியும். அதுபோன்று இந்த வேலைவாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக உங்கள் விண்ணப்பத்தை அனுப்பி பயன் அடையுங்கள்.
Author : என்.நாகராஜன்

