Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பிரம்மாண்டமாக மாறும் தூத்துக்குடி துறைமுகம்! ரூ.500 கோடிக்கும் அதிகமான மெகா திட்டம் - வணிகர்களுக்கு செம செய்தி!

பிரம்மாண்டமாக மாறும் தூத்துக்குடி துறைமுகம்! ரூ.500 கோடிக்கும் அதிகமான மெகா திட்டம் - வணிகர்களுக்கு செம செய்தி!

ABP Nadu 1 week ago

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை நவீனமயமாக்கும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் அதிகரித்து வரும் தேவைகளைச் சமாளிக்கும் வகையில், சரக்குகளை விரைவாகக் கையாளுதல், பாதுகாப்பாகச் சேமித்தல் மற்றும் தடையின்றி வெளியேற்றுதல் ஆகிய வசதிகளைத் துறைமுக நிர்வாகம் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் குறித்து துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் விரிவான அறிக்க ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சரக்குப் பெட்டக முனைய நவீனமயமாக்கல்

துறைமுகத்தின் 7-வது சரக்கு தளம், ₹517 கோடி மதிப்பீட்டில் அதிநவீன சரக்குப் பெட்டக முனையமாக மாற்றப்பட்டு வருகிறது. 370 மீட்டர் நீளமுள்ள இந்தத் தளம், ஆண்டிற்கு 4,20,000 சரக்குப் பெட்டகங்களை (TEUs) கையாளும் திறன் கொண்டதாக உருவாக்கப்படுகிறது. மேலும், பெரிய சரக்குக் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் இதன் ஆழம் 11.70 மீட்டரிலிருந்து 14.20 மீட்டராக அதிகரிக்கப்படுகிறது. இதன் மூலம் அதிகபட்சமாக 12,100 சரக்குப் பெட்டகங்களைக் சுமந்து வரும் பிரம்மாண்ட கப்பல்களை இங்கு எளிதாகக் கையாள முடியும். இப்பணிகள் அனைத்தும் 2029-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் உள்கட்டமைப்பு மற்றும் சுங்கக் கட்டுப்பாட்டுப் பகுதி

இதேபோல், ₹87.38 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு வரும் 10-வது சரக்கு தளத்தின் பணிகள் தற்போது 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மேலும், துறைமுக வர்த்தகத்தை எளிதாக்கும் வகையில் ₹61.64 கோடி செலவில் கூடுதலாக 40 ஏக்கர் பரப்பளவில் புதிய சுங்கக் கட்டுப்பாட்டுப் பகுதி (Customs Bound Area) உருவாக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்

துறைமுகத்தின் தற்போதைய மற்றும் எதிர்காலக் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, ₹72.66 கோடி மதிப்பீட்டில் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை அமைக்கப்பட்டு வருகிறது. 'தலைகீழ் சவ்வூடுபரவல்' (Reverse Osmosis) தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த ஆலை மூலம் நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் நன்னீர் உற்பத்தி செய்ய முடியும். இக்குடிநீர்த் திட்டம் 2027-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author : கிஷோர்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu