Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
புதுச்சேரி நீட் மருத்துவ சேர்க்கை 2026: சென்டாக் 2-வது தரவரிசை பட்டியல் வெளியீடு - ஜிப்மர் மாணவர்கள் நீக்கம்!

புதுச்சேரி நீட் மருத்துவ சேர்க்கை 2026: சென்டாக் 2-வது தரவரிசை பட்டியல் வெளியீடு - ஜிப்மர் மாணவர்கள் நீக்கம்!

ABP Nadu 1 week ago

புதுச்சேரி: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.வி.எஸ்சி. உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான வரைவு தரவரிசைப் பட்டியலை சென்டாக் 2-வது முறையாக வெளியிட்டுள்ளது.

ஆட்சேபனைகளை பரிசீலனை செய்த பிறகு வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில், ஜிப்மரில் மருத்துவ இடம் கிடைத்த மாணவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

6,023 விண்ணப்பங்கள்

புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டிற்கான மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, சிறுபான்மையினர் மற்றும் என்.ஆர்.ஐ. ஒதுக்கீடுகளின் கீழ் மாணவர்களிடம் இருந்து மொத்தம் 6,023 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதையடுத்து சென்டாக் சார்பில் முதற்கட்டமாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, மாணவர்களிடம் இருந்து ஆட்சேபனைகள் பெறப்பட்டன. மாணவர்கள் தெரிவித்த ஆட்சேபனைகள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை சென்டாக் அதிகாரிகள் பரிசீலனை செய்தனர்.

அதன் அடிப்படையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது 2-வது வரைவு தரவரிசைப் பட்டியல் www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு ஒதுக்கீட்டில் 120 பேர் குறைவு

முதற்கட்ட மெரிட் பட்டியலில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 1,745 மாணவர்கள் இடம்பெற்றிருந்தனர். ஆட்சேபனைகளைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள புதிய வரைவு தரவரிசைப் பட்டியலில் இந்த எண்ணிக்கை 1,625 ஆக குறைந்துள்ளது.

அதேபோல் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான மெரிட் பட்டியலிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 4,754 மாணவர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது 4,717 மாணவர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட பட்டியலில் 414 மாணவர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், திருத்தப்பட்ட வரைவு தரவரிசைப் பட்டியலில் அந்த எண்ணிக்கை 352 ஆக குறைந்துள்ளது.

இடஒதுக்கீட்டு பிரிவுகளில் மாற்றம்

பல்வேறு இடஒதுக்கீட்டு பிரிவுகளின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களும் புதிய பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அதன்படி,

  • இ.டபுள்யூ.எஸ். பிரிவில் – 20 பேர்
  • ஓ.பி.சி. பிரிவில் – 393 பேர்
  • எம்.பி.சி. பிரிவில் – 431 பேர்
  • முஸ்லிம் பிரிவில் – 67 பேர்
  • மீனவர் பிரிவில் – 60 பேர்
  • எஸ்.சி. பிரிவில் – 268 பேர்
  • பி.டி. பிரிவில் – 1 பேர்
  • முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு பிரிவில் – 14 பேர்
  • விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசு பிரிவில் – 33 பேர்
  • விளையாட்டு வீரர்கள் பிரிவில் – 50 பேர்
  • அரசு பள்ளி இடஒதுக்கீட்டில் – 28 பேர்
  • தெலுங்கு சிறுபான்மையினர் பிரிவில் – 9 பேர்

என மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

கணினி கலந்தாய்வு

மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நேரடி கலந்தாய்வு முறையில் இல்லாமல், கணினி கலந்தாய்வு முறையில் நடைபெற உள்ளது.

சென்டாக் தரவரிசைப் பட்டியலைத் தொடர்ந்து, இந்த மாதத்திற்குள் மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கணினி கலந்தாய்வை நடத்தி மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்க திட்டமிட்டுள்ளது.

முதற்கட்ட கலந்தாய்வில் இடம் கிடைக்கும் மாணவர்கள், உரிய காலக்கெடுவுக்குள் கல்லூரிகளில் சேருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அடுத்த மாதம் 4-ம் தேதி வரை மாணவர்களுக்கு கால அவகாசம் வழங்க சென்டாக் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கல்விக் கட்டணம் எப்போது வெளியாகும்?

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு முன்பாக கல்விக் கட்டண விவரங்களை வெளியிட வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். கட்டணத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்டால், மாணவர்களும் பெற்றோர்களும் தேவையான தொகையைத் தயார் செய்து கொள்ள முடியும்.

தற்போது இரண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கட்டணம் இறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியின் கட்டணம் மட்டும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

இதனால், எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான முழுமையான கல்விக் கட்டண விவரங்களை கலந்தாய்வுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாக வெளியிட சென்டாக் திட்டமிட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ் சமர்ப்பிக்க வாய்ப்பு

இதற்கிடையே, மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களிடம் புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ்கள் இருந்தால், அவற்றை சென்டாக் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ்களை 27-ம் தேதி காலை 10 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இறுதி தரவரிசைப் பட்டியல் மற்றும் கணினி கலந்தாய்வு குறித்த அடுத்தகட்ட அறிவிப்புகளை சென்டாக் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

Author : சிவரஞ்சித்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu