புதுச்சேரி: புதுச்சேரியையே உலுக்கிய 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதம்.
புதுச்சேரியையே உலுக்கிய 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். இது தொடர்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி, புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முத்தியால்பேட்டையைச் சேர்ந்த கருணாஸ் (18) மற்றும் விவேகானந்தன் (56) ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்தனர். இதில் விவேகானந்தன் கடந்த 2024 செப்டம்பர் மாதம் சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.
நீதிமன்ற விசாரணை மற்றும் வாதங்கள்:
இந்த வழக்கு புதுச்சேரி போக்சோ (POCSO) விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 30-ம் தேதி, இவ்வழக்கில் கருணாஸ் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார். அவருக்கான தண்டனை விவரங்கள் மே 5-ம் தேதி (நேற்று) அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர் பச்சையப்பன் மற்றும் சிறுமி தரப்பு வழக்கறிஞர்கள் சுமார் 20 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்தனர். இந்தக் குற்றம் "அரிதினும் அரிதான" வகையைச் சார்ந்தது என்பதால், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி அவர்கள் வாதிட்டனர்.
நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு:
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுமதி, ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கும் முன்பாக, அவரது பின்னணி மற்றும் குடும்ப விவரங்களை ஆராய வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார். அதன்படி, குற்றவாளியின் குடும்ப விவரங்கள் மற்றும் சமூகப் பின்னணி குறித்த விரிவான அறிக்கையை அரசு தரப்பு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை மே 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆணையிட்டார். அன்றைய தினம் குற்றவாளி கருணாஸிற்கான இறுதித் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படலாம் என்பதால் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Author : சிவரஞ்சித்

