நான் தேர்தலுக்கு மட்டும் வருபவன் கிடையாது. உங்களுக்கு விசுவாசத்தோடு இருப்பேன் என விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயகர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் விராலிமலை தொகுதியில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயகர் போட்டியிட்டு சுமார் 62 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கிடையில் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் விஜயகர் தொகுதி மக்களுக்கு நன்றி சொல்லும் நிகழ்வு தள்ளிக்கொண்டே சென்றது. இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வந்து ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில் அன்னவாசல் பகுதியில் இருந்து தனது நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை அவர் தொடங்கியுள்ளார்.
பொதுமக்களிடையே பேசிய விஜயகர், ”உங்க எல்லாருடைய முகத்தைப் பார்த்தால் தான் எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. அன்னவாசலில் முதல் நன்றி சொல்லும் நிகழ்வை தொடங்குகிறேன். மிக அதிகமான வாக்குகளை வாங்கி கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விஜயகர் உங்க வீட்டு பிள்ளை. நான் தேர்தலுக்கு மட்டும் வருபவன் கிடையாது. நான் எப்போதும் வருவேன் என்பது மக்களாகிய உங்களுக்கு நன்றாக தெரியும். என்னை தூக்கி பிடித்து விட்டீர்கள்.
சாமி முன்னாடி சொல்கிறேன் ஆயுள் உள்ளவரை தொகுதி மக்களுக்கு நன்றியோடு இருப்பேன். என்னை இந்த தொகுதியில் சுமார் 62,073 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு விசுவாசத்தோடு இருப்பேன். விராலிமலை தொகுதி முழுக்க என்னுடைய குரல் ஓங்கி ஒலிக்கும்” என தெரிவித்தார். மேலும், “நன்றி சொல்லும் நிகழ்வில் மக்கள் அமோக வரவேற்பு அளிக்கிறார்கள். விராலிமலை சட்டமன்ற தொகுதியின் ஒவ்வொரு பகுதியில் வாழும் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்” என கூறியுள்ளார்.
திமுகவைப் பார்த்தால் இன்றைக்கும் பயம் இருக்கு.. தவெகவை அட்டாக் செய்த டிஆர்பி ராஜா!
விஜயகர் முடிவு என்ன?
2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பின் அதிமுகவில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டது. பெரும்பான்மை இல்லாத தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என சி.வி.சண்முகம் தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் குழு வலியுறுத்தியது. அதேசமயம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மற்றொரு எம்.எல்.ஏ.,க்கள் குழு அதற்கு மறுப்பு தெரிவித்தது. இதில் சி.விஜயகர், சி.வி.சண்முகம் அணியில் இருந்தார். இதனிடையே சி.வி.சண்முகம், சி.விஜயகர் இருவர் தவிர அந்த குழுவில் இருந்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள் எடப்பாடி பழனிசாமியுடன் சமாதானமாகி இணைந்தனர்.
இதனால் சி.வி.சண்முகம், சி.விஜயகர் இருவரும் அரசியலில் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். இதில் சி.விஜயகர் தவெகவில் இணையப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் இப்போதைக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் என் பயணம் தொடரும் என தெரிவித்த விஜயகர், மக்களின் எண்ணம் அடிப்படையில் அடுத்தக்கட்ட முடிவை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
Author : பேச்சி ஆவுடையப்பன்

