2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு நடிகர் சேரன் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அந்த கட்சி 108 தொகுதிகளில் தனது வெற்றியை நிலைநாட்டியுள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனிடையே சட்டமன்றத்தில் தவெக பெரும்பான்மையை நிரூபிக்க 10 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை என்ற சூழலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகள் வென்ற காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. பிறகட்சிகளின் ஆதரவுடன் விஜய் நாளை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
விஜயை கடுமையாக விமர்சித்த சேரன்
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான சேரன், சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு தெரிவித்தார். அதேசமயம் சினிமாவில் உச்ச நடிகராக இருந்த விஜய் அரசியல் களம் கண்டு தேர்தலை சந்தித்ததற்கு கடுமையான ஆட்சேபனை தெரிவித்தார். தனது சமூக வலைத்தளப்பதிவில் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வந்தார். அதற்கு தவெக தொண்டர்களும் கடுமையான கண்டனம் தெரிவித்தனர்.

