கரூர் செல்லும் முதலமைச்சர் விஜய்
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்றுள்ள நிலையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக தொடர்ந்து ஆலோசனையில் தவெக அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிலையில், கடந்த மாதம் திருச்சிக்கு பயணம் செய்து கட்சி சார்பான நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் முதல் முறையாக அரசின் திட்டங்களை தொடங்கி வைக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் நாளை கரூர் செல்லவுள்ளார். அங்கு எந்த எந்த திட்டங்களை தொடங்கிவைக்கவுள்ளார். என்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ பட்டியலை கரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல்
இது தொடர்பாக அரசு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் 10.07.2026 அன்று (வெள்ளிக்கிழமை) வருகை புரிந்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி, பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்கள்.
இதனை தொடர்ந்து கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம். மனவாசி ஊராட்சியில் ரூ. 1700 கோடி மதிப்பீட்டில் தோல் அல்லாத (Non-Leather) காலணிகளை உற்பத்தி செய்யும் Evervan Kothari Footwear Private Limited என்ற புதிய தனியார் தொழிற் சாலைக்கு, முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த தொழிற்சாலையின் மூலம் சுமார் 13,500 நபர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைவார்கள்.
32 பேருக்கு அரசு பணி
தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் பணியாற்றும் வகையில் 32 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு செம்டம்பர் மாதம் தவெக சார்பாக நடைபெற்ற விஜய் பிரச்சார கூட்டத்தில் அதிகளவு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தவெகவிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ள நிலையில், அந்த குடும்பங்களை சேர்ந்த 32 பேருக்கு அரசு பணி வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
Author : கு. அஜ்மல்கான்

