Dailyhunt
CSK vs PBKS: சொந்த மண்ணில் கம்பேக் தருமா சிஎஸ்கே? பேட்டிங்கில் தேறுமா? வரிந்து கட்டும் பஞ்சாப் - வெற்றி யாருக்கு?

CSK vs PBKS: சொந்த மண்ணில் கம்பேக் தருமா சிஎஸ்கே? பேட்டிங்கில் தேறுமா? வரிந்து கட்டும் பஞ்சாப் - வெற்றி யாருக்கு?

ABP Nadu 2 weeks ago

IPL 2026 CSK vs PBKS: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி, சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை - பஞ்சாப் மோதால்:

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று நடைபெற உள்ள லீக் சுற்று போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதன் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

கம்பேக் தருமா சிஎஸ்கே?

தனது முதல் லீக் சுற்று போட்டியிலேயே கண்ட மோசமான தோல்வி காரணமாக சென்னை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வென்று நடப்பு சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்ய, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இளம் அணி முனைப்பு காட்டி வருகிறது. குறிப்பாக சொந்த மண்ணில் நடைபெறும் நடப்பாண்டின் முதல் போட்டியில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை சிஎஸ்கே பூர்த்தி செய்யுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மறுமுனையில் முதல் போட்டியில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ள பஞ்சாப் அணி, இன்றைய போட்டியில் வென்று முதலிடத்திற்கு முன்னேற தீவிரம் காட்டுகிறது. இதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

சொந்த மண்ணில் வெற்றி கிடைக்குமா?

ராஜஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னையின் டாப் ஆர்டர் பேட்டிங் மிகப்பெரிய சொதப்பலாக அமைந்தது. குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகியோர் பெரும் ஏமாற்றத்தை அளித்தனர். கேப்டன் ருதுராஜ் மற்றும் ஃபினிஷராக கருதப்படும் துபே ஆகியோர் இன்றைய போட்டியில் பொறுப்புடன் விளையாடி ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஜேமி ஓவர்டன் தரமான ஆல்-ரவுண்டராக தனது திறனை நிரூபித்துள்ளார். மற்றபடி, பந்துவீச்சிலும் சென்னை அணி கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது. இன்றைய போட்டியிலும் தோனி மற்றும் ப்ராவிஸ் ஆகியோர் காயம் காரணமாக விளையாடப்போவதில்லை. மறுமுனையில் கடந்த சீசனில் ஆதிக்கம் செலுத்திய பாணியிலேயே இந்த முறையும் சரியான கலவையில் ப்ளேயிங் லெவனை உருவாக்கி பஞ்சாம் கவனம் ஈர்க்கிறது.

சென்னை Vs பஞ்சாப் - நேருக்கு நேர்

ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை 17 முறையும், பஞ்சாப் 15 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.அதிகபட்சமாக சென்னை அணி ஒரு இன்னிங்ஸில் 240 ரன்களையும், குறைந்தபட்சமாக பஞ்சாப் அணி 92 ரன்களையும் சேர்த்துள்ளது.

சேப்பாக்கம் மைதானம் எப்படி?

இந்திய கிரிக்கெட் மைதானங்களில் வரலாற்று சிறப்புமிக்க மைதானங்களில் ஒன்றான சேப்பாக்கத்தில் இதுவரை 91 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 58 முறை முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸில் சராசரி ஸ்கோர் 164 ஆகும். சேப்பாக்கம் மைதானம் மறுகட்டமைப்பு செய்யப்பட்ட பிறகு இங்கு நடைபெற உள்ள முதல் ஐபிஎல் போட்டி இதுவாகும். இதனால் இன்றைய போட்டியின் போது ஆடுகளத்தில் நிலவும் ஈரப்பதத்தை சார்ந்தே, டாஸ் வெல்லும் அணி தனது முடிவை நிர்ணயிக்கக் கூடும்.

உத்தேச ப்ளேயிங் லெவன்

சென்னை: ருதுராஜ் கெய்க்வாட் (கே), சஞ்சு சாம்சன் (WK), ஆயுஷ் மத்ரே, மேத்யூ ஷார்ட், ஷிவம் துபே, கார்த்திக் ஷர்மா, ஜேமி ஓவர்டன், நூர் அகமது, மாட் ஹென்றி, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது

பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங் (WK), பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கோனாலி, ஷ்ரேயாஸ் ஐயர் (கே), நேஹல் வதேரா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷஷாங்க் சிங், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங்

Author : குலசேகரன் முனிரத்தினம்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu