தமிழகத்தில் நிலவி வரும் இழுபறியான அரசியல் சூழலுக்கு இடையே, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் புதுச்சேரியில் முகாமிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
புதுச்சேரி சொகுசு விடுதியில் அதிமுக எம்.எல்.ஏக்கள்
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில், அக்கட்சியைச் சேர்ந்த சுமார் 28 எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி பூரணங்குப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் திடீரென தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் அதிமுகவின் மூத்த தலைவர்களான ஓ.எஸ்.மணியன் மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோரும் இணைந்துள்ளது, ஏதோ ஒரு முக்கிய அரசியல் நகர்வு நடைபெறுவதையே காட்டுகிறது.
விஜய் (தவெக) - ஆட்சியமைப்பதில் சிக்கலா?
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ள நிலையில், இதுவரை ஆளுநர் தரப்பிலிருந்து பதவியேற்புக்கான அழைப்பு வரவில்லை. மாறாக, விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு திடீரென விலக்கப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல், தவெக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் வெடித்த இருவேறு கருத்துக்கள்
தவெக-வுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அதிமுகவுக்குள் பெரும் விவாதமே நடந்து வருகிறது. சி.வி.சண்முகம் உள்ளிட்ட ஒரு தரப்பினர் தவெக-வுக்கு ஆதரவு அளிக்கலாம் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை எஸ்.பி.வேலுமணி, சி.விஜயகர் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். நேற்று நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மற்றொரு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி,
"எந்தச் சூழ்நிலையிலும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்காது. ஆதரவு அளிப்பது குறித்து எந்தப் பேச்சும் எழவில்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது சி.வி.சண்முகம் அணியினரின் நகர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பார்க்கப்படுகிறது.
திமுக - அதிமுக ரகசியக் கூட்டணியா?
இந்த அரசியல் குழப்பங்களுக்கு இடையே ஒரு புதிய தகவலும் தீயாய் பரவி வருகிறது. தவெக ஆட்சியமைப்பதைத் தடுப்பதற்காக, பரம எதிரிகளான திமுகவும் - அதிமுகவும் கைகோர்க்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
அதிமுக எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி விடுதியில் தங்க வைக்கப்பட்டிருப்பது, 'குதிரை பேரம்' அல்லது 'உள்கட்சி பிளவு' போன்ற யூகங்களை வலுப்படுத்தியுள்ளது. தவெக-வின் அடுத்தகட்ட நகர்வு மற்றும் ஆளுநரின் முடிவு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்தே தமிழகத்தின் அடுத்த ஆட்சி அமையும். அதிமுக எம்.எல்.ஏக்கள் விடுதியிலேயே முகாமிட்டுள்ளதால், புதுச்சேரி பூரணங்குப்பம் பகுதி தற்போது அரசியல் கவனிப்பின் மையப்புள்ளியாக மாறியுள்ளது.
Author : சிவரஞ்சித்

