Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
டெல்டா மாவட்டங்கள் கெத்து - ரெயில் பயணிகள் வருகையில் டாப் இடங்கள்!

டெல்டா மாவட்டங்கள் கெத்து - ரெயில் பயணிகள் வருகையில் டாப் இடங்கள்!

ABP Nadu 3 weeks ago

ஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் 2024-2025-ம் ஆண்டை விட 2025-2026-ம் ஆண்டு ரெயில் நிலையங்களில் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

இதன் மூலம் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் முதல் 10 இடங்களில் 5 இடங்களை டெல்டா மாவட்ட ரெயில் நிலையங்கள் தட்டிச்சென்று கெத்து காட்டியுள்ளன.

திருச்சி கோட்டத்தில் 151 ரெயில் நிலையங்கள்

தென்னக ரெயில்வே கோட்டங்களில் ஒன்று திருச்சி ரெயில்வே கோட்டம். இந்த ரெயில்வே கோட்டத்தில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியும் இடம் பெற்றுள்ளன. இந்த மாவட்டங்களில் மட்டும் 151 ரெயில் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த 151 ரெயில் நிலையங்களில் அதிக வருவாயை ஈட்டித்தரும் ரெயில் நிலையமாக திருச்சி ரெயில் நிலையம் விளங்கி வருகிறது.

கடந்த 2023-24-ம் ஆண்டில் திருச்சிக்கு அடுத்தபடியாக தஞ்சை, விழுப்புரம், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய இடங்கள் இருந்தன. தற்போது தஞ்சை 3-வது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தின் மிகவும் பழமை வாய்ந்த ரெயில் நிலையங்களில் தஞ்சை ரெயில் நிலையமும் ஒன்றாகும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 2-12-1861-ம் ஆண்டு தஞ்சை ரெயில் நிலையம் தொடங்கப்பட்டது. திருச்சி-நாகை வழித்தடம், ஆங்கிலேயர்களின் வாணிப போக்குவரத்துக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டது.

அப்போது அந்த வழித்தடம் அகல ரெயில்பாதையாக இருந்தது. பின்னர் மீட்டர்கேஜ் பாதையாக மாற்றப்பட்டு, தற்போது மீண்டும் அகல ரெயில் பாதையாக்கப்பட்டது. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லவும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னை போன்ற நகரங்களுக்கு செல்லவும் முக்கிய வழித்தடமாக தஞ்சை இருந்தது. இந்த வழித்தடம் மெயின் லைனாக இருந்தது.

தஞ்சை வழியாக இயக்கப்பட்ட ரெயில்கள் ரத்து

நாளடைவில் திருச்சி-விழுப்புரம் இடையே ரெயில்பாதை அமைக்கப்பட்ட பின்னர் தஞ்சை வழியாக தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது தஞ்சை வழியாக சென்னை, ராமேஸ்வரம், திருப்பதி, வாரணாசி, பெங்களூரு, புதுச்சேரி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், எர்ணாகுளம், செங்கோட்டை, கச்சிகுடா, ஐதராபாத் போன்ற இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களும், தஞ்சையில் இருந்தும், தஞ்சை வழியாகவும் மயிலாடுதுறை, திருச்சி, நாகை, நாகூர், காரைக்கால், வேளாங்கண்ணி போன்ற இடங்களுக்கு பயணிகள் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

தஞ்சை ரெயில் நிலையத்தில் 5 நடைமேடைகளும் 7 ரெயில்வே பாதைகளும் உள்ளன. நாள்தோறும் ஏராளமான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுவதால் தஞ்சை ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படுகிறது. மேலும் பஸ் கட்டணத்தை விட ரெயில் கட்டணம் குறைவு என்பதால் ரெயில்களில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சி கோட்டத்தில் திருச்சிக்கு அடுத்தபடியாக அதிக வருவாய்ஈட்டித்தரும் ரெயில் நிலையங்களில் தஞ்சை ரெயில் நிலையமும் ஒன்று ஆகும்.

44.03 லட்சம் பயணிகள்… 3ம் இடம் பிடித்த தஞ்சை ரெயில்நிலையம்

கடந்த 2025- 2026-ம் ஆண்டில் திருச்சி கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டிக்கொடுத்ததில் தஞ்சை ரெயில் நிலையம் 3-ம் இடம் பிடித்துள்ளது. அதன்படி திருச்சி கோட்டத்தில் திருச்சி ரெயில் நிலையத்தில் கடந்த ஆண்டு 86 லட்சத்து 87 ஆயிரத்து 101 பயணிகள் வந்து சென்றுள்ளனர். இதன் மூலம் ரூ.191 கோடியே 78 லட்சத்து 18 ஆயிரத்து 422 வருவாய் கிடைத்துள்ளது. அதற்கடுத்தபடியாக விழுப்புரம் ரெயில் நிலையத்துக்கு 37 லட்சத்து 82 ஆயிரத்து 847 பயணிகள் வந்து சென்றுள்ளனர். இதன் மூலம் ரூ.57 கோடியே 98 லட்சத்து 32 ஆயிரத்து 682 வருவாய் கிடைத்துள்ளது.

3-வதாக தஞ்சை ரெயில் நிலையத்திற்கு 44 லட்சத்து 3 ஆயிரத்து 152 பயணிகள் வந்து சென்றுள்ளனர். இதன் மூலம் ரூ.51 கோடியே 22 லட்சத்து 52 ஆயிரத்து 639 வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 2024-2025-ம் ஆண்டு தஞ்சை ரெயில் நிலையத்துக்கு 42 லட்சத்து 52 ஆயிரம் பயணிகள் வருகை தந்துள்ளனர். இதன் மூலம் ரூ.51 கோடியே 63 லட்சம் வருவாய் கிடைத்தது. கடந்த ஆண்டு, அதற்கு முந்தைய ஆண்டை விட பயணிகள் எண்ணிக்கை1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை அதிகரித்துள்ளது.

4-வது இடத்தில் கும்பகோணமும், 5-வது இடத்தில் மயிலாடுதுறையும், 8-வது இடத்தில் நாகப்பட்டினமும், 10-வது இடத்தில் திருவாரூரும் உள்ளன. கும்பகோணத்திற்கு கடந்த ஆண்டு 22 லட்சத்து 12 ஆயிரம் பயணிகள் வருகை தந்ததன் மூலம் ரூ.31 கோடியே 7 லட்சத்து 19 ஆயிரத்து 248 வருவாய் கிடைத்துள்ளது. அதற்கடுத்தபடியாக மயிலாடுதுறை ரெயில் நிலையத்திற்கு 20 லட்சத்து 85 ஆயிரம் பயணிகள் வந்து சென்றதன் மூலம் ரூ.27 கோடியே 89 லட்சத்து 71 ஆயிரத்து 924 வருவாய் கிடைத்துள்ளது.

இதேபோல் டெல்டா மாவட்டத்தில் உள்ள நாகை ரெயில் நிலையத்துக்கு 12 லட்சத்து 56 ஆயிரத்து 350 பயணிகள் வந்ததன் மூலம் ரூ.21 கோடியே 70 லட்சத்து 81 ஆயிரத்து 571-ம், திருவாரூர் ரெயில் நிலையத்துக்கு 14 லட்சத்து 36 ஆயிரத்து 310 பயணிகள் வந்து சென்றதன் மூலம் ரூ.15 கோடியே 61 லட்சத்து 13 ஆயிரத்து 222-ம் கிடைத்துள்ளது.

பயணிகள் வருகை அதிகரிப்பால் வருவாய் உயர்வு

2024-2025-ம் ஆண்டை விட கடந்த ஆண்டு தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ரெயில் நிலையங்களுக்கு பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.ஒரு சில ரெயில் நிலையங்களில் வருவாய் சற்று குறைந்து காணப்பட்டாலும், பெரும்பாலான ரெயில் நிலையங்களில் வருவாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் உள்ள 151 ரெயில் நிலையங்களில் முதல் 10 இடங்களில் 5 இடங்களை டெல்டா மாவட்டங்களில் உள்ள ரெயில் நிலையங்கள் தட்டிச்சென்றன.

Author : என்.நாகராஜன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu