தர்மபுரி மாவட்டத்தில் காதலிக்க மறுத்த பெண்ணை பேருந்து நிலையத்தில் வைத்து இளைஞர் ஒருவர் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பெண்கள் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படையை கடந்த மாதம் தொடங்கி வைத்தது. இதில் இடம்பெற்றுள்ள பெண் போலீசார் பள்ளி, கல்லூரி, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் பல குற்றச்சம்பவங்கள் தடுக்கப்பட்டுள்ளதோடு, குற்றவாளிகளும் உடனடியாக பிடிக்கப்பட்டுள்ளனர்.
தர்மபுரியில் கொடூர சம்பவம்
இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்மரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்ற நபர், அதே பகுதியில் வசிக்கும் 23 வயது இளம்பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் அவரை காதலிக்க மறுத்ததாக சொல்லப்படுகிறது. எனினும் சின்னசாமி விடாமல் அந்த பெண்ணை பின்தொடர்ந்து காதலிக்குமாறும், திருமணம் செய்துக்கொள்ளுமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணோ சின்னசாமியிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி வேறு பெண்ணை திருமணம் செய்து கொள் என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அப்பெண் நேற்று காலை வழக்கம்போல வேலைக்குச் சென்றுள்ளார். இரவு 7.30 மணியளவில் பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக தருமபுரி நகர பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு அவருக்காக சின்னசாமி நீண்ட நேரமாக காத்திருந்திருக்கிறார். அப்பெண்ணிடம் மீண்டும் சின்னசாமி திருமணம் தொடர்பான பேச்சை எடுக்க அந்த பெண் மறுக்கவும், இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சின்னசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த பெண்ணின் கழுத்தை அறுத்தார். அதுமட்டுமல்லாமல் அப்பெண்ணின் வயிறு, முதுகுப் பகுதியிலும் கத்தியால் வெட்டியுள்ளார்.
இரவு நேரத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பேருந்து நிலையத்தில் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நடந்தது அங்கு நின்ற பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் காயமடைந்த இளம்பெண் ரத்த வெள்ளத்தில் சரிய, சின்னசாமி அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் அவரைப் பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். ரத்தம் சொட்ட சொட்ட நின்ற சின்னசாமியை தருமபுரி நகர காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனிக்கு அனுப்பப்பட்ட அந்த பெண் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டு செல்லப்பட்டு அங்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிங்கப்பெண் அதிரடிப்படை எங்கே?
சின்னசாமி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் நடந்து நீண்ட நேரமாகியும் பெண்கள் பாதுகாப்புக்கென அமைக்கப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் பேருந்து நிலையம் வரவில்லை என சமூக வலைத்தளத்தில் வீடியோவை பகிர்ந்து பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர். பேருந்து நிலையங்களில் எப்போதும் ஒரு குழு கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Author : பேச்சி ஆவுடையப்பன்

