ஒட்டன்சத்திரம் தொகுதியில் பிரச்சாரம் செய்த அமைச்சர், 1996-ல் இருந்ததை போன்ற எழுச்சி மக்களிடம் இருப்பதாகவும், திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்றும் பேட்டியளித்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடக்கிறது. அன்று எந்த கூட்டணி வெற்றி பெறப்போகிறது என்று தமிழ்நாடு உள்பட பிற மாநில மக்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். வெற்றிக்காக திமுக, அதிமுக உள்ளிட்ட பல பெரிய கட்சிகள் கடுமையாக பிரச்சாரம் செய்து வருகின்றது.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் அர. சக்கரபாணி, இன்று சப்பலநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த டீக்கடை ஒன்றில் புகுந்த அமைச்சர், அவரே டீ போட்டு அங்கிருந்த மக்களுக்கு வழங்கினார். அங்கிருந்த வடையைப் பார்த்து, வடை எப்போ போட்டது? எனக் கிண்டலாகக் கேட்ட அமைச்சரின் நகைச்சுவை உணர்வு அங்கிருந்தவர்களைச் சிரிக்க வைத்தது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, "செல்லுமிடமெல்லாம் மக்கள் உற்சாகமாக வரவேற்கின்றனர்.
மகளிர் உரிமைத்தொகை, இலவசப் பேருந்து பயணம் மற்றும் வீட்டுமனைப் பட்டா போன்ற திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள 8,000 ரூபாய் கூப்பன் திட்டத்தை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். 1996-ல் இருந்த எழுச்சி இப்போதும் தெரிகிறது" என்றார்."மக்கள் கொடுக்கும் ஆதரவைப் பார்த்தால், முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்பார் என்பதும், 7-வது முறையாகத் திமுக ஆட்சியமைக்கும் என்பதும் உறுதி.

200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெல்லும். நானும் 7-வது முறையாக வெற்றி பெறுவது குறித்து மக்களிடமே கேட்டால் அவர்கள் பதில் சொல்வார்கள். சொன்னது மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யும் ஆட்சி இது" எனப் பெருமிதத்துடன் கூறினார். பழனி தனி மாவட்டக் கோரிக்கை குறித்துப் பேசிய அவர், "பழனியை மாவட்டம் ஆக்குவோம் என முதல்வரே கூறியிருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் எந்த மாவட்டமும் பிரிக்கப்படவில்லை. மீண்டும் திமுக ஆட்சியமைத்தவுடன் மாவட்டப் பிரிப்பு என வரும்போது, கண்டிப்பாகப் பழனி தனி மாவட்டமாக்கப்படும்" என உறுதி அளித்தார்.
Author : நாகராஜ்

