தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக-விற்கு எதிராக அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றனர்.
இந்த முறை திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்களில் அதிமுக-வில் இருந்து திமுக-வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எட்டி வீசப்பட்ட பெயிண்ட் டப்பாக்கள்:
ஆலங்குளம் தொகுதியில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ-வான மனோஜ் பாண்டியன் போட்டியிடுகிறார். பல காலமாக அதிமுக-வில் இருந்த இவருக்கு திமுக-வில் இணைந்த சில மாதங்களிலே வாய்ப்பு வழங்கியது ஆலங்குளம் தொகுதியில் உள்ள திமுக-வினர் சிலருக்கு அதிருப்தியையும், ஆதங்கத்தைையும் உண்டாக்கியுள்ளது.
கடையம் பகுதியில் ஒரு தெருவில் உள்ள சுவரில் திமுக சார்பில் போட்டியிடும் மனோஜ் பாண்டியனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று சுவர் விளம்பரத்தை ஓவியர்கள் சிலர் வரைந்திருந்தனர். அப்போது, அங்கே வந்த திமுக-வைச் சேர்ந்த நிர்வாகி ஜெயக்குமார் ஆதங்கத்தில் பெயிண்ட் டப்பாக்களை எட்டி சாக்கடையில் வீசினார். மேலும், சுவரில் ஓவியம் வரைந்த ஓவியர்களையும் ஒருமையில் மிரட்டி அவர்களை விரட்டினார்.
மனோஜ் பாண்டியனுக்கு எதிர்ப்பு:
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜெயக்குமாரின் ஆதங்கத்திற்கு கட்சியில் புதியதாக இணைந்த மனோஜ் பாண்டியனுக்கு எம்எல்ஏ சீட் வழங்கப்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது. மனோஜ் பாண்டியனும் ஆலங்குளம் தொகுதி திமுக-வினரை சமாதானப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
திமுக-வின் கீழ்மட்ட நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதால் ஆலங்குளம் தொகுதியில் இதன் தாக்கம் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக-வில் பல ஆண்டுகளாக பணியாற்றியவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு கட்சியில் புதியதாக இணைந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கியது அந்தந்த தொகுதியில் பல ஆண்டுகளாக திமுக-விற்கு பணியாற்றியவர்களுக்கு ஆதங்கத்தை உருவாக்கியுள்ளது.
அதிருப்தியில் திமுக:
அதன் எதிரொலியாகவே ஆலங்குளம் தொகுதியில் நடந்த சம்பவத்தை பலரும் கூறுகிறார்கள். போடியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கம் தொகுதியில் போட்டியிடுவதற்கும் வாய்ப்பு வழங்கியதற்கு அந்தந்த தொகுதியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த திமுக-வினருக்கு கடும் ஆதங்கத்தை உண்டாக்கியுள்ளது.
மாற்றுக்கட்சியினருக்கு வரவேற்பு:
திமுக மட்டுமின்றி தவெக-விலும் திமுக, அதிமுக ஆகிய கட்சியில் இருந்து வந்த மாற்றுக்கட்சியினருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக-வில் அமைச்சர்களாக பொறுப்பு வகிக்கும் சேகர்பாபு, செந்தில் பாலாஜி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ரகுபதி உள்ளிட்ட பலரும் அதிமுக-வில் இருந்து வந்தவர்கள். பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கு பதிலாக மாற்றுக்கட்சியினருக்கு திடீரென வாய்ப்பு வழங்குவது தொடர்ச்சியாக அரங்கேறி வருவதாகவும் திமுக-வினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Author : சுகுமாறன்

