Dailyhunt
எடப்பாடிக்கு அடுத்து ஆளுநர் பதவிதான்! - ஒட்டன்சத்திரத்தில் கனிமொழி எம்.பி அதிரடி பேச்சு

எடப்பாடிக்கு அடுத்து ஆளுநர் பதவிதான்! - ஒட்டன்சத்திரத்தில் கனிமொழி எம்.பி அதிரடி பேச்சு

ABP Nadu 2 weeks ago

திண்டுக்கல் : ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அர.சக்கரபாணியை ஆதரித்து, திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி அண்ணா திடலில் பிரம்மாண்ட தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோடு அண்ணா திடலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் அர.சக்கரபாணியை ஆதரித்து, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இதில், திமுக துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார், திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

ஒட்டன்சத்திரம் தொகுதியின் வேட்பாளர், இந்தப் பகுதியில் 30 லட்சம் மரக்கன்றுகளை நட்டு பசுமை மாற்றத்தை உருவாக்கியுள்ளார். இங்குள்ள சாலைகள் முழுவதும் சிறப்பாக அமைத்து, இருபுறமும் ஏராளமான வணிகத் தளங்கள் உருவாகியுள்ளன. அதற்குக் காரணமாக இருந்தவர் வேட்பாளரும், அமைச்சருமான சக்கரபாணி.

கடந்த 5 ஆண்டுகளின் ஒட்டன்சத்திரம் தொகுதியில் தி.மு.க செய்த வளர்ச்சிப் பணிகளில், காவிரி ஆற்றிலிருந்து ரூ.930 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.310.00 கோடி மதிப்பீட்டில் தார்சாலை, பேவர் பிளாக், மழைநீர் வடிகால் உள்பட்ட அடிப்படை தேவைகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் தொகுதியில் 61,000 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உயர்கல்வித்துறை சார்பில் ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.22.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஒட்டன்சத்திரம் தொகுதியில் சுமார் 15,000 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் தொகுதியில் ரூ.925.49 கோடி மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது. காளாஞ்சிபட்டியில் ரூ. 12 கோடி மதிப்பீட்டில் "கலைஞர் நூற்றாண்டு போட்டித் தேர்வு பயிற்சி மையம்" நிறுவப்பட்டுள்ளது. பழனி - தாராபுரம் சாலையில் ரூ.95.00 கோடி மதிப்பீட்டில் புதிய இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2,712 புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

மகளிருக்கு ஃபிரிட்ஜ் வழங்குவதாக அதிமுக கூறியுள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையை யாரும் பெரிதாக கவனிக்க மாட்டார்கள். நமது தேர்தல் அறிக்கையில், மகளிருக்கு 8000 ரூபாய் கூப்பன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி அவர்கள் வீட்டு உபயோகத்திற்குத் தேவையான எந்தப் பொருளையும் வாங்கிக் கொள்ளலாம். சுயதொழில் தொடங்குவதற்காக கிரைண்டரும் வாங்கிக் கொள்ளலாம்.

குடியுரிமை திருத்தச் சட்டம், முத்தலாக் சட்டம், வேளாண் திருத்தச் சட்டம் உள்ளிட்ட எதற்கும் வாய் திறக்காத எடப்பாடி பழனிசாமி, நமக்கான நிதி பகிர்வு நிறுத்தப்பட்ட போதும் வாய் திறக்கவில்லை. நம் வீட்டுப் பிள்ளைகள் இந்தி படித்தால் தான் நிதி வழங்கப்படும் என்று கூறிய போதும் பேசாமல் இருந்தார் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தனது கட்சிக்கும் துரோகம் செய்தவர். தன்னை அரியணையில் அமர வைத்த சசிகலா அம்மையாருக்கும் துரோகம் செய்தவர் தான். அவருடன் இருந்த ஓ. பன்னீர்செல்வத்திற்கும் துரோகம் செய்தவர். அதனால்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி திமுகவில்தான் உள்ளது என்று உணர்ந்து, ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு வருங்காலம் என்பது ஆளுநர் பதவிதான். தேர்தல் முடிந்த பிறகு, ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநராகச் சென்று விடுவார். தமிழ்நாட்டில் இருந்த ஒரு ஆளுநர், சட்டமன்றத்தில் வழங்கப்படும் உரைகளை முறையாகப் படிக்காமல் ஒவ்வொரு முறையும் புறக்கணித்து செல்கிறார். அதேபோல், நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஒன்றிய அரசு எழுதிக் கொடுக்கிறதையே வாசிப்பார்.

முன்னதாக ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்று சிக்ஸர் அடித்து மீண்டும் ஏழாவது முறையாக வெற்றி பெற்று அடுத்த சிக்ஸர் அடிக்க காத்திருப்பவர் தான் உங்களது நிரந்தர சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளர் அர. சக்கரபாணி.

ஒட்டன்சத்திரம் தொகுதிக்கான திமுக தேர்தல் வாக்குறுதிகள்

ஒட்டன்சத்திரத்தில் வேளாண் தொழில் பூங்கா அமைக்கப்படும். விளைபொருட்களைப் பாதுகாத்துச் சந்தைப்படுத்த நவீனக் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்படும். விவசாயிகளின் நலனுக்காக ஒட்டன்சத்திரம் உழவர் சந்தை மேம்படுத்தப்படும்.

உணவு சார்ந்த புத்தொழில்களை தொடங்க இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். ஊரக பகுதிகளில் பேருந்து சேவை அதிகரிக்கப்படும். குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்காக பூங்காக்கள் அமைக்கப்படும். இளைஞர்களுக்காக முதல்வர் படைப்பகம் தொடங்கப்படும்.

அரசுப் பள்ளிகள் அனைத்திற்கும் ஸ்மார்ட் போர்டு வசதி செய்து தரப்படும். தொகுதியில் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படும். சுய உதவி குழு பெண்களுக்கு முதலீட்டுடன் தொழில் தொடங்க ரூ. 5 லட்சம் வரை பிணை எதுவுமின்றி மானியத்துடன் வங்கிக் கடனுதவி வழங்கப்படும். திண்டுக்கல் பூட்டு தொழிலுக்கான குழுமங்கள் உருவாக்கப்படும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள நமது திராவிட மாடல் முதலமைச்சர் தமிழக மக்களுக்கு செய்த திட்டங்களையும் அடுத்து தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டங்களையும் எடுத்துக் கூறினார்

திமுக சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றக்கூடிய கட்சி என்றும் தொடர்ந்து 30 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் உங்களது சட்டமன்ற வேட்பாளர் அர. சக்கரபாணிக்கு அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக் கொண்டார்.

Author : சிவரஞ்சித்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu