Dailyhunt
எம்எல்ஏ சீட் விற்பனைக்கு..? மயிலாடுதுறை காங்கிரஸ் நிர்வாகிகள் எம்பி சுதாவிற்கு கருப்புக்கொடி காட்ட முடிவு?

எம்எல்ஏ சீட் விற்பனைக்கு..? மயிலாடுதுறை காங்கிரஸ் நிர்வாகிகள் எம்பி சுதாவிற்கு கருப்புக்கொடி காட்ட முடிவு?

ABP Nadu 2 weeks ago

யிலாடுதுறை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறை தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரும் இழுபறிக்குப் பிறகு, தஞ்சாவூரைச் சேர்ந்த ஜமால் முகமது யூனுஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் இது கடும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வேட்பாளர் மாற்றக் கோரி காமராஜர் மாளிகை முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தால் தொகுதி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

தொடரும் 'வெளியூர் வேட்பாளர்' சர்ச்சை

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது மயிலாடுதுறை தொகுதியில் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அப்போது எழுந்த 'வெளிமாவட்ட நபர்' என்ற விமர்சனங்களைத் தாண்டி அவர் வெற்றி பெற்றார். தற்போது நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலிலும் அதே 'ஃபார்முலா'வை காங்கிரஸ் தலைமை கையாண்டுள்ளது. உள்ளூர் நிர்வாகிகளின் விருப்பத்தைப் புறக்கணித்துவிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜமால் முகமது யூனுஸை வேட்பாளராக அறிவித்திருப்பது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல அமைந்துள்ளது.

காமராஜர் மாளிகையில் அவசர ஆலோசனை

வேட்பாளர் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகமான 'காமராஜர் மாளிகையில்' மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட்டாரத் தலைவர் அன்பழகன் பேசுகையில், "பல ஆண்டுகளாகக் கட்சிக்காக ரத்தம் சிந்தி உழைத்த உள்ளூர் நிர்வாகிகளை மதிக்காமல், அறிமுகமே இல்லாத ஒருவரை வேட்பாளராகத் திணிப்பது ஏற்க முடியாதது. இதனால் மனமுடைந்துள்ள தொண்டர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய வேண்டும்" என ஆவேசமாகத் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன கோஷங்கள்

கூட்டத்தைத்தொடர்ந்து, மாவட்டத் துணைத் தலைவர் சிவராமன் தலைமையில் கட்சி அலுவலகத்தின் வாயிலில் திரண்ட நிர்வாகிகள், வேட்பாளர் ஜமால் முகமது யூனுஸ் மற்றும் எம்பி சுதாவிற்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். "மண்ணின் மைந்தருக்கே முன்னுரிமை கொடு!", "தொண்டர்களை மதிக்காத தலைமை ஒழிக!" போன்ற கோஷங்களை எழுப்பினர். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்சிக்காக உழைத்து வருபவர்களைப் புறக்கணித்துவிட்டு, பண பலம் அல்லது செல்வாக்கின் அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதா? என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

எம்பி சுதா மீது சரமாரி குற்றச்சாட்டு

செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகள், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா மீது அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்தனர். "எம்.பி சுதா உள்ளூர் நிர்வாகிகளுடன் எவ்வித ஆலோசனையும் செய்யாமல் தன்னிச்சையாகச் செயல்படுகிறார். 40-க்கும் மேற்பட்ட உள்ளூர் பிரமுகர்கள் விருப்ப மனு அளித்திருந்தும், அவர்களைக் கண்டு கொள்ளாமல் தஞ்சாவூர் நபரைப் பரிந்துரைத்தது ஏன்? கரூர் எம்பி ஜோதிமணி அவர்கள் கூறியது போல, சட்டமன்ற இடங்கள் விலைக்கு விற்கப்படுகிறதோ என்ற பலமான சந்தேகம் எங்களுக்கு எழுகிறது" என வேதனையுடன் தெரிவித்தனர்.

கருப்புக்கொடி போராட்டம் எச்சரிக்கை

"தலைமை உடனடியாகத் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வேட்பாளரை மாற்றவில்லை என்றால், அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்குத் தேர்தல் பணிகளில் எவ்வித ஒத்துழைப்பும் வழங்க மாட்டோம். மேலும், எம்பி சுதா மயிலாடுதுறை தொகுதிக்குள் எங்கு வந்தாலும் அவருக்குக் கருப்புக்கொடி காட்டி எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்வோம்" என நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்கனவே அதிருப்தியில் இருந்த உள்ளூர் திமுகவினர் ஒருபுறம் இருக்க, தற்போது காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே வெடித்துள்ள இந்த உள்நாட்டுப் போர், தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தலைமையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்தே மயிலாடுதுறை தேர்தல் களம் சூடுபிடிக்கும்.

Author : எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu