Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Holiday Special Bus : வார விடுமுறை, சுபமுகூர்த்தம், பௌர்ணமி கிரிவலம்! வெளியூர் செல்ல திட்டமா? சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

Holiday Special Bus : வார விடுமுறை, சுபமுகூர்த்தம், பௌர்ணமி கிரிவலம்! வெளியூர் செல்ல திட்டமா? சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

ABP Nadu 2 weeks ago

தொடர் விசேஷ நாட்கள்

விடுமுறை என்றாலே வெளியூர்களுக்கு செல்லவும், நண்பரகளோடு சுற்றுலா செல்லவும் திட்டமிடுவார்கள்.

அந்த வகையில் இன்றைய தினம் பௌர்ணமி கிரிவலம் செல்லவும், வருகிற ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தம் நாளாக இருப்பதால் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ள திட்டமிடுவார்கள். ஆனால் தற்போது அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா.? என எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த வகையில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வார விடுமுறையுடன் பௌர்ணமி கிரிவலம்

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில் இன்று 27/08/2026 (வியாழக்கிழமை பௌர்ணமி) நாளை 28/08/2026 (வெள்ளிக்கிழமை) 29/08/2026 (சனிக்கிழமை) மற்றும் 30/08/2026 (ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தம்) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து சிறப்பு பேருந்து

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 27/08/2026 (வியாழக்கிழமை) அன்று 380 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சென்னை கோயம்பேட்டிலிருந்தும் திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 27/08/2026 முதல் 29/08/2026 ஆகிய ஒவ்வொரு நாட்களிலும் 130 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 28/08/2026 (வெள்ளிக்கிழமை) அன்று 1140 பேருந்துகளும், 29/08/2026 (சனிக்கிழமை) 1020 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து

இது மட்டுமில்லாமல் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து 27/08/2026 முதல் 29/08/2026 ஆகிய நாட்களில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 90 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு திரும்பும் வகையில் ஞாயிறு அன்று சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 30/08/2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 690 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்து பயணியுங்கள்

இந்நிலையில், இந்த வார இறுதியில் வியாழக்கிழமை அன்று 5230 பயணிகளும் வெள்ளிக்கிழமை அன்று 12078 பயணிகளும் சனிக்கிழமை 8256 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 13567 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Author : கு. அஜ்மல்கான்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu