Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இடைத்தேர்தலுக்கு முன் முதல்வர் விஜய் எண்ட்ரி... திருச்சி அரசியலில் அனல் பறக்கும் சூழல்!

இடைத்தேர்தலுக்கு முன் முதல்வர் விஜய் எண்ட்ரி... திருச்சி அரசியலில் அனல் பறக்கும் சூழல்!

ABP Nadu 2 weeks ago

ஞ்சாவூர்: திருச்சி கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில் முதலமைச்சர் விஜய் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க வருகை புரிய உள்ளார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதி மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக, தமிழக முதலமைச்சர் விஜய் விரைவில் திருச்சிக்கு வர உள்ளார் என்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த பயணம் குறித்த அதிகாரப்பூர்வ தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இரு தொகுதிகளிலும் வெற்றி!

சமீபத்தில் நடைபெற்ற 2026 தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், சென்னையில் உள்ள பெரம்பூர் மற்றும் திருச்சியின் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலுமே தவெக தொண்டர்களின் பலத்த ஆதரவோடும், மக்களின் பேராதரவோடும் லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முதலமைச்சர் விஜய் அபார வெற்றி பெற்றார்.

எம்.எல்.ஏ பதவி ராஜினாமா - பின்னணி என்ன?

சட்டவிதிகளின்படி, இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற ஒருவர், ஏதாவது ஒரு தொகுதியின் பதவியை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும். இதன் காரணமாக, முதலமைச்சர் விஜய் தான் வெற்றி பெற்ற பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் தன்வசம் வைத்துக்கொண்டு, கடந்த மே 10, 2026 அன்று திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார்.

ஆறு மாதத்தில் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர் யார்?

இதனைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக சட்டமன்றப் பேரவைச் செயலகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பொதுவாக ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அடுத்த ஆறு மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும். எனவே, திருச்சி கிழக்கு தொகுதிக்கு மிக விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தவெக சார்பில் அங்கு மீண்டும் யார் களம் இறக்கப்படுவார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு அரசியல் களம் எங்கும் நிலவி வருகிறது.

கு.ப.கிருஷ்ணனுக்கு புதிய பொறுப்பு: லால்குடி தொகுதியில் போட்டியிட்டு நூலிழப்பில் தோல்வியடைந்த தவெகவின் முக்கிய முகமான முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், மீண்டும் திருச்சி கிழக்கில் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், கடந்த மே 22, 2026 அன்று அவர் 'தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக' நியமிக்கப்பட்டார்.

யார் அந்தப் புதிய முகம்?: இதனால் தற்போதைய சூழலில், கு.ப.கிருஷ்ணனின் மகன் சிரஞ்சீவி அல்லது தூய்மையான நிர்வாகத்திற்குப் பெயர் பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் ஆகிய இருவரில் ஒருவருக்கு திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட தவெக தலைமை வாய்ப்பளிக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.

உதயநிதி ஸ்டாலினின் விமர்சனத்திற்குப் பதில்டி!

முன்னதாக, "தேர்தலில் தன்னை வெற்றிப் பெற செய்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு முதலமைச்சர் விஜய் இதுவரை ஒருமுறை கூட நேரில் சென்று நன்றி சொல்லவில்லை" என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவும், இடைத்தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கும் விதமாகவும் முதலமைச்சர் விஜய்யின் இந்த திருச்சி பயணம் அமையப் போகிறது.

பரபரக்கும் திருச்சி அரசியல் களம்!

விரைவில் இடைத்தேர்தல் முரசு கொட்டப்படவுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்யின் இந்த திருச்சி வருகை தவெக தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நன்றி அறிவிப்பு கூட்டத்தோடு சேர்த்து, இடைத்தேர்தலுக்கான தேர்தல் பிரசாரப் பணிகளுக்கும் இந்த பயணம் பிள்ளையார் சுழி போடும் என்பதால் திருச்சியில் இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Author : என்.நாகராஜன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu