காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஒரகடம் மற்றும் சாலவாக்கத்தில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் (Government ITI) 2026 - 2027 ஆம் கல்வியாண்டிற்கான மாணவ, மாணவியர் நேரடி சேர்க்கை வரும் 31.07.2026 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு தொழிற்பயிற்சிகளில் பல்வேறு பிரிவுகளில் சேர்ந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) கெ.ரா.திவ்யஸ்ரீ தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் ஐடிஐ தொழிற்பிரிவுகள்
காஞ்சிபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓராண்டு கால அளவிலான இன்டஸ்டிரியல் ரோபோட்டிக்ஸ் & டிஜிட்டல் மேனுப்பேக்சரிங் டெக்னீசியன், கம்பியூட்டர் எஐடட் மேனுபேக்சரிங் ப்ரோகிராமர் மற்றும் அழகுசாதனவியல் (Cosmetology) ஆகிய பிரிவுகள் உள்ளன. மேலும், இரண்டாண்டு கால அளவிலான அட்வான்ஸ் சி என் சி மெசினிங் டெக்னீசியன் மற்றும் டெக்னீசியன் மெக்கட்ரானிக்ஸ் ஆகிய தொழிற்பிரிவுகளும் இங்கு கற்பிக்கப்படுகின்றன.
ஒரகடம் ஐடிஐ தொழிற்பிரிவுகள்
ஒரகடம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இரண்டாண்டு கால அளவிலான கம்மியர் மோட்டார் வாகனம், குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பவியலாளர், கம்மியர் மின்னணுவியல், மெக்கானிக் எலக்ட்ரிக் வண்டி, அட்வான்ஸ்டு CNC மிஷினிங் டெக்னிசியன் ஆகிய பிரிவுகள் உள்ளன. அத்துடன் ஓராண்டு கால அளவிலான மேனுபேக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் & ஆட்டோமேசன் மற்றும் இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னிசியன் ஆகிய தொழிற்பிரிவுகளும் செயல்பட்டு வருகின்றன.
சாலவாக்கம் ஐடிஐ தொழிற்பிரிவுகள்
சாலவாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இரண்டாண்டு கால அளவிலான மெக்கானிக் எலக்டிரிக் வெகிகிள் மற்றும் இன்டஸ்டிரியல் இன்டர்நெட் ஆப் திங்ஸ் (IIOT) டெக்னீசியன் ஆகிய பிரிவுகள் உள்ளன. மேலும், ஓராண்டு கால அளவிலான மெக்கானிக் லென்ஸ் & பிரைசம் கிரைன்டிங் மற்றும் 6 மாத கால அளவிலான டிரைவர் கம் மெக்கானிக் ஆகிய பயிற்சிகளும் இங்கு வழங்கப்படுகின்றன.
இலவச சலுகைகள் மற்றும் உதவித்தொகை விவரங்கள்
இந்த அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதுதவிர, இலவச மிதிவண்டி, காலணிகள், பாடப்புத்தகம், வரைபட உபகரணங்கள், சீருடைகள் மற்றும் தையற்கூலி ஆகியவை வழங்கப்படுவதோடு, மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750 வழங்கப்படுகிறது. மேலும், அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவியர்களுக்கு 'புதுமைப்பெண்' திட்டத்தின் கீழும், மாணவர்களுக்கு 'தமிழ்ப்புதல்வன்' திட்டத்தின் கீழும் கூடுதலாக மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. சேர்க்கை குறித்த கூடுதல் விபரங்களைப் பெற காஞ்சிபுரம் நிலையத்திற்கு 9659452204 என்ற எண்ணிலும், சாலவாக்கம் நிலையத்திற்கு 9840893558 என்ற எண்ணிலும், ஒரகடம் நிலையத்திற்கு 9715472686 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
Author : கிஷோர்

