நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2026-ஆம் ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விரிவான விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சேர்க்கை விபரங்கள் மற்றும் தகுதிகள்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், திருக்குவளை மற்றும் செம்போடை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் (Government ITI), மற்றும் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களின் 50 சதவீத (50%) அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றில் மாணவ, மாணவிகள் சேர்க்கை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்பயிற்சி நிலையங்களில் 2026-ஆம் கல்வியாண்டிற்கான பல்வேறு தொழிற்பிரிவுகளில் இன்னும் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் வகையில், "நேரடி சேர்க்கை" (SPOT ADMISSION) தற்பொழுது தகுதிவாய்ந்த நபர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது. இதற்கு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியான மாணவ, மாணவிகள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
முன்னதாக விண்ணப்பிக்கக் கொடுக்கப்பட்டிருந்த கால அவகாசம் தற்பொழுது 31.07.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை விண்ணப்பிக்கத் தவறிய மற்றும் தகுதியுடைய மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான அசல் ஆவணங்கள்
இந்த நேரடி சேர்க்கைக்கு (Spot Admission) தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் வரும் பொழுது விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிபரங்களுடன் பின்வரும் முக்கிய ஆவணங்களை அசல் (Original) மற்றும் நகல்களாக எடுத்து வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
* செயலில் உள்ள கைபேசி எண் (Mobile Number)
* மின்னஞ்சல் முகவரி (E-mail ID)
* ஆதார் அட்டை
* 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (அசல்)
* மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate - அசல்)
* சாதி சான்றிதழ் (Community Certificate - அசல்)
* போர்ட் அளவு சமீபத்திய புகைப்படம் (Passport Size Photograph)
விண்ணப்பம் மற்றும் சேர்க்கைக் கட்டண விபரம்
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
ஓராண்டு தொழிற்பிரிவு: விண்ணப்பக் கட்டணம் மற்றும் சேர்க்கைக் கட்டணமாக மொத்தம் ரூ. 235 மட்டும் செலுத்த வேண்டும்.
ஈராண்டு தொழிற்பிரிவு: விண்ணப்பக் கட்டணம் மற்றும் சேர்க்கைக் கட்டணமாக மொத்தம் ரூ. 245 மட்டும் செலுத்த வேண்டும்.
அரசு வழங்கும் அள்ளிக்கொடுக்கும் சலுகைகள்
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (Government ITI) சேர்ந்து பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்தவும், அவர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கவும் தமிழக அரசு பல்வேறு விலையில்லாப் பொருட்களையும், நிதியுதவிகளையும் வழங்கி வருகிறது.
* விலையில்லா மிதிவண்டி (சைக்கிள்)
* விலையில்லா சீருடைகள் (Uniforms)
* விலையில்லா பாடநூல்கள் மற்றும் வரைபடக் கருவிகள் (Drawing Instruments)
*விலையில்லா பாதுகாப்பு காலணிகள் (Shoes)
*விலையில்லா பேருந்து பயண அட்டை (Bus Pass)
* மாதாந்திர உதவித்தொகை: பயிற்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ரூ. 750 உதவித்தொகையாக நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
*புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள்:
இவற்றுடன் கூடுதலாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று, தற்பொழுது தொழிற்பயிற்சி நிலையங்களில் உயர்கல்வி தொடரும் மாணவ, மாணவிகளுக்குத் தமிழக அரசின் சமூக நலத்திட்டங்களின் கீழ் மாதந்தோறும் நிதியுதவி வழங்கப்படுகிறது.
பெண் மாணவிகளுக்கு: "புதுமைப்பெண்" திட்டத்தின் கீழ் தகுதியான மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 நிதியுதவி வழங்கப்படும்.
ஆண் மாணவர்களுக்கு: "தமிழ்ப்புதல்வன்" திட்டத்தின் கீழ் தகுதியான மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 நிதியுதவி வழங்கப்படும்.
100% வேலைவாய்ப்பு உறுதி
தொழிற்பயிற்சி நிலையங்களில் வெற்றிகரமாகப் பயிற்சியை முடிக்கும் மாணவ, மாணவிகளுக்குப் படிப்பின் இறுதியாண்டில் வளாக நேர்காணல் (Campus Interview) நடத்தப்படும். இதன் மூலம் முன்னணி தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 100% வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். மேலும் சில முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சிகளும் (Apprenticeship with Job) மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னுரிமை மற்றும் தொடர்பு எண்கள்
இந்த நேரடி சேர்க்கையானது "ஒவ்வொரு நாளும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை" (First Come, First Served) என்ற அடிப்படையில் தகுதியின்படி ஒதுக்கப்படும் என்பதால், காலியிடங்கள் நிரம்பும் முன்னரே தகுதியான மாணவ, மாணவிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களை அணுகி பயிற்சியில் சேர்ந்து தங்களது எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது குறித்த கூடுதல் விபரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு, நாகப்பட்டினம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் உதவி இயக்குநரை 9499055737 மற்றும் 04365-250126 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Author : எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை

