Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இனி சென்னை டூ மதுரவாயல் வெறும் 15 நிமிடம் தான்! ஆனா ஒரு ட்விஸ்ட்.. மத்திய அரசு போட்ட புது கண்டிஷன்!

இனி சென்னை டூ மதுரவாயல் வெறும் 15 நிமிடம் தான்! ஆனா ஒரு ட்விஸ்ட்.. மத்திய அரசு போட்ட புது கண்டிஷன்!

ABP Nadu 1 week ago

சென்னையின் மிக முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றான சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரட்டை அடுக்கு மேம்பால விரைவுச்சாலை பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தியாவின் மிக நீளமான 6 வழி இரட்டை அடுக்கு மேம்பால நெடுஞ்சாலையாக இது உருவாக்கப்பட்டு வருகிறது. சென்னை துறைமுகத்திற்குச் சென்று வரும் கனரக சரக்கு வாகனங்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், 21 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.5,570 கோடி மதிப்பீட்டில் இந்த பிரத்யேக விரைவுச்சாலை அமைக்கப்படுகிறது. மெரினா கடற்கரையின் காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவிடம் அருகே, சென்னை துறைமுக நுழைவாயில் எண் 10-ல் தொடங்கும் இந்த மேம்பாலம் மதுரவாயல் சந்திப்பு வரை நீள்கிறது.

மத்திய அரசு மற்றும் நெடுஞ்சாலை ஆணையத்தின் புதிய அப்டேட்

இந்தத் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் புதிய தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவு வழித்தடமானது கோயம்பேடு வரை கூவம் ஆற்றங்கரையை ஒட்டிச் செல்கிறது. அங்கிருந்து மதுரவாயலை அடையும் வரை தேசிய நெடுஞ்சாலை 48-ன் (NH 48) மையப் பகுதியை ஒட்டி இப்பணிகள் தொடர்கின்றன. தற்போது கூவம் ஆற்றில் தூண்கள் அமைக்கப்பட்டு, பணிகள் மிகவும் சீரான முறையில் விறுவிறுப்பாக நகர்ந்து வருகின்றன. கடந்த மே மாதமே முடிக்க திட்டமிடப்பட்டிருந்த சில பணிகள், பருவமழை காரணமாக சற்று தாமதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பணி நேரமும் திட்ட நிறைவு காலமும்

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்குப் பெரிய அளவில் இடையூறு ஏற்படாத வகையில் தினசரி 11 மணி நேரம் பணிகள் பிரிக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. அதன்படி, பகல் நேரத்தில் 5 மணி நேரமும், இரவு நேரத்தில் 6 மணி நேரமும் ஊழியர்கள் தீவிரமாகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரம்மாண்ட உள்கட்டமைப்பு திட்டத்தை முழுமையாக முடித்து, வரும் 2027-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்து திட்டமிட்டுள்ளனர்.

கீழ்த்தளம் இலவசம்; மேல்தளத்திற்கு சுங்கக் கட்டணம்

இந்த இரட்டை அடுக்கு மேம்பாலத்தின் வடிவமைப்பு மிகவும் தனித்துவமானது. இதன் மேல்தளமானது சென்னை துறைமுகத்தின் 10-வது நுழைவு வாயில் வழியாகச் சென்று வரும் பிரம்மாண்ட கொள்கலன் (கண்டெய்னர்) லாரிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்படுகிறது. இந்த மேல்தள சரக்கு வழித்தடத்தைப் பயன்படுத்தும் வணிக வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும். அதே நேரத்தில், பாலத்தின் கீழ்த்தளமானது வழக்கமான மாநகரப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும் என்றும், இதற்கு பொதுமக்கள் எந்தவித சுங்கக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலுக்குக் கிடைக்கும் நிரந்தரத் தீர்வு

வருகிற 2047-ஆம் ஆண்டிற்குள் சென்னை துறைமுகத்தின் சரக்குக் கொள்ளளவு ஆண்டுக்கு 200 மில்லியன் டன்களை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விரைவுச்சாலை பயன்பாட்டிற்கு வரும்போது, துறைமுகத்திற்குச் சரக்குகள் வந்து செல்லும் நேரம் பெருமளவு குறையும். இது சென்னை மாநகரத்தின் ஒட்டுமொத்த போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக அமைவதோடு, வாகன ஓட்டிகளுக்குச் சுமூகமான பயணச் சூழலையும் வழங்கும். இந்தத் திட்டம் நிறைவடைந்தால், தினசரி சுமார் 40,000 கார்களின் போக்குவரத்தைக் கையாளும் திறனை இந்த விரைவுச்சாலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Author : கிஷோர்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu