Dailyhunt
Iran War Trump: ஒரே மாதம்.. " வெற்றி முதல் நரகம் வரை" ஈரான் போரில் டிரம்ப்பின் உருட்டுகள்.. ஒரு பார்வை

Iran War Trump: ஒரே மாதம்.. " வெற்றி முதல் நரகம் வரை" ஈரான் போரில் டிரம்ப்பின் உருட்டுகள்.. ஒரு பார்வை

ABP Nadu 1 week ago

மெரிக்க அரசியல் மற்றும் உலக அரசியலில் பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் டொனால்ட் ட்ரம்ப். குறிப்பாக ஈரான் உடனான மோதல் மற்றும் நேட்டோ (NATO) நாடுகளுடனான அவரது உறவு எப்போதும் ஒரு 'ரோலர் கோஸ்டர்' பயணம் போலத்தான் இருக்கும்.

கடந்த மார்ச் 3 முதல் ஏப்ரல் 5 வரையிலான அவரது கருத்துக்கள், அவர் ஒரு தெளிவான முடிவில் இருக்கிறாரா அல்லது உலக நாடுகளைக் குழப்புகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

மார்ச் தொடக்கத்தில் 'வெற்றி' முழக்கம்!

மார்ச் மாத தொடக்கத்தில் மிகவும் உற்சாகமாக காணப்பட்ட ட்ரம்ப், மார்ச் 3-ம் தேதி "நாங்கள் போரில் வென்றுவிட்டோம்" என்று அறிவித்தார். அடுத்த சில நாட்களிலேயே, "ஈரானைத் தோற்கடித்துவிட்டோம்" என்றும், "யுத்தம் மிக அழகாக முடிவுக்கு வருகிறது" என்றும் ட்வீட் தட்டினார்.

ஆனால், மார்ச் 11 அன்று அவர் ஆற்றிய உரைதான் ஹைலைட்: "வெற்றி பெற்றுவிட்டோம் என்று சீக்கிரம் சொல்லக்கூடாது.. ஆனால் நாங்கள் ஜெயிச்சிட்டோம். முதல் ஒரு மணி நேரத்திலேயே ஆட்டம் முடிந்துவிட்டது!" என்றார். அடுத்த நாளே, "முழுமையாக இன்னும் ஜெயிக்கவில்லை" என அந்தர் பல்டி அடித்தார்.

நேட்டோவிடம் மிரட்டலும் உருட்டலும்

மார்ச் பாதியில் ட்ரம்ப்பின் கவனம் நேட்டோ மற்றும் நட்பு நாடுகளின் பக்கம் திரும்பியது.

மார்ச் 14: "தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள்."

மார்ச் 15: "உதவி செய்யவில்லை என்றால், அதை நான் கண்டிப்பாக ஞாபகம் வைத்திருப்பேன்."

மார்ச் 16: "உண்மையில் எங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை. நான் சும்மா டெஸ்ட் பண்ணி பார்த்தேன்!"

ஒரே நாளில் மூன்று விதமாகப் பேசிய ட்ரம்ப், நேட்டோ நாடுகள் உதவாவிட்டால் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான முக்கிய மோதல் புள்ளியான ஹார்முஸ் ஜலசந்தி குறித்து மார்ச் 21 அன்று பேசிய அவர், "அந்தப் பாதையை பயன்படுத்துபவர்கள் அதைப் பாதுகாத்துக் கொள்ளட்டும், எங்களுக்கு அது தேவையில்லை" என்றார். ஆனால், அடுத்த 24 மணிநேரத்தில், "ஈரானுக்கு 48 மணிநேரம் கெடு விதிக்கிறேன், அந்தப் பாதையைத் திறக்காவிட்டால் ஈரான் காலி" என ஆக்ரோஷமானார்.

"பெரிய பரிசு காத்திருக்கிறது"

மார்ச் 25 அன்று ட்ரம்ப் ஒரு ரகசியத்தை உடைத்தார். ஈரான் தங்களுக்கு ஒரு 'பெரிய பரிசு' கொடுத்திருப்பதாகவும், அது பல கோடி மதிப்புடையது என்றும் கூறினார். ஆனால் அந்தப் பரிசு என்ன என்பதை அவர் விளக்கவில்லை. மார்ச் இறுதி வரை "ஒப்பந்தம் மிக அருகில் உள்ளது" என்று கூறி வந்த அவர், ஏப்ரல் 1-ல் "விரைவில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என மர்மம் நீடித்தார்.

ஏப்ரல் 5: வார்னிங் கொடுத்த டிரம்ப்

இந்தத் தொடர் அறிக்கைகளின் உச்சக்கட்டமாக நேற்று (ஏப்ரல் 5) ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கை உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. மிகவும் கடுமையான வார்த்தைகளால் ஈரானை சாடிய அவர், "அந்தப் பாதையை (Strait) உடனடியாகத் திறங்கள், இல்லையென்றால் நரகத்தை அனுபவிப்பீர்கள் - வேடிக்கை பாருங்கள்!" என்று பதிவிட்டுள்ளார். மேலும் அதன் இறுதியில் "Praise be to Allah" என்று குறிப்பிட்டிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Author : ஜேம்ஸ்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu