Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கால்வலி வராமல் இருக்க மாடிப்படி உயரம் எவ்வளவு இருக்க வேண்டும் ? - இதோ கட்டுமான டிப்ஸ்

கால்வலி வராமல் இருக்க மாடிப்படி உயரம் எவ்வளவு இருக்க வேண்டும் ? - இதோ கட்டுமான டிப்ஸ்

ABP Nadu 3 weeks ago

பட்ஜெட் அடிப்படையில் வீடுகள்

ரு இடத்தை தேர்வு செய்து அங்கு நம் பட்ஜெட் அடிப்படையில் வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் பல்வேறு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

கட்டடங்கள் கட்டுவதற்கான பணிகளை ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்தாலும் உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

பெரும்பாலான இடங்களில் வீட்டுக்கான அனைத்து பாகங்களையும் கவனமாக பார்த்து அமைப்பவர்கள் கூட, மாடிப்படி விஷயத்தில் மிகுந்த அலட்சியமாக செயல்படுகின்றனர். வீட்டுக்கான மாடிப்படி எங்கு எப்படி அமைய வேண்டும் என்பதில் உரிமையாளர்கள் தெளிவாக முடிவு செய்ய வேண்டும்.

வரைப்படம் தயாரிக்கும் போது திட்டமிடல்

உங்கள் புதிய வீட்டை கட்டும் போது அதற்கான வரைபடம் தயாரிக்கும் போதே மாடிப்படி எங்கு எப்படி அமைய வேண்டும் என்பதில் கவனமாக திட்டமிட வேண்டும். வரைபட நிலையிலேயே இதற்கான இடத்தை தேர்வு செய்து விட்டால் எதிர்காலத்தில் நெருக்கடியை தவிர்க்கலாம்.

பொதுவாக வீடுகளில் உட்புறம் அல்லது வெளிப்புறத்தில் மாடிப்படி அமைக்கப்படும். தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஏற்ற வகையில் மாடிப்படி அமையும் இடம், அளவு போன்ற விஷயங்கள் வேறுபடும் என்பதை உரிமையாளர்கள் புரிந்து செயல்பட வேண்டும்.

மாடிப்படி என்ன அளவு இருக்க வேண்டும்

தனி வீடு என்றால் மாடிப்படி அமைக்கும் போது அதன் அகலம், மூன்று அடி அளவுக்கு இருந்தால் போதும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், அடுக்குமாடி குடியிருப்பு என்றால், ஒரே சமயத்தில் அதிக நபர்கள் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால் மாடிப்படியின் அகலம் அதற்கு ஏற்ப அதிகரிக்கப்பட வேண்டும்.

இதற்கு அடுத்தபடியாக மாடிப்படி அமைக்கும் போது அதில் கால் வைக்கும் இடத்தின் அகலம் , பாதம் முழுமைக்கும் போதுமானதாக இருக்க வேண்டும். குறிப்பாக, படியின் உயரம், ஆறு அங்குலம் அளவுக்கு இருக்க வேண்டும் என்பதை உரிமையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாடிப்படிக்கான கட்டுமான பணியில், ரைசர் எனப்படும் உயரத்தை கடைபிடிப்பதில் தான் பல்வேறு தவறுகள் நடக்கின்றன. இதற்கு பெரும்பாலான இடங்களில் பயன்படுத்தப்படும் செங்கலின் உயரம், நான்கு அங்குலம் தான் இருக்கும். இதில், இரண்டு செங்கலை ஒன்றின் மீது ஒன்று என்ற அடிப்படையில் அடுக்கினால், எட்டு அங்குலம் அளவுக்கு உயரம் அதிகரிக்கும்.

கால்வலி ஏற்படுவதை தவிர்க்க

ஒரு செங்கலை பயன்படுத்தினால் மேற்பூச்சுடன் சேர்த்து, ஐந்து அங்குலம் தான் வரும். இதற்கு ஒரு செங்கலை முழுமையாகவும், அடுத்த செங்கலை உடைத்தும் பயன்படுத்தும் போது ஆறு அங்குல உயரத்தை உறுதி செய்ய முடியும். இவ்வாறு சரியான உயரத்தை உறுதி செய்து மாடிப்படி அமைத்தால் அதை பயன்படுத்துவோருக்கு கால் வலி ஏற்படுவதை தவிர்க்கலாம்.

தரை பகுதியில் இருந்து மேல் தளம் வரை எத்தனை படிகள் அமைக்க வேண்டும் என்பதை ஆறு அங்குல உயரத்தின் அடிப்படையில் கணக்கிட வேண்டும். இந்த வழிமுறைகளை கவனமாக கடைப்பிடித்தால் வீட்டுக்கான மாடிப்படியை எவ்வித பிரச்னையும் இன்றி பயன்படுத்தலாம்.

கட்டட வரைபட தயாரிப்பின் போது மாடிப்படி அமையும் இடம் மட்டுமல்லாது அதன் உயரம், அகலம் தொடர்பான விபரங்களையும் குறிப்பிட வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள். மாடிப்படிக்கான கட்டுமான பணியில், கால் வைக்கும் இடத்துக்கான உயரம் ஆறு அங்குலமாக இருப்பதை துல்லியமாக கடைப்பிடித்தால் பயன்பாட்டு நிலையில் கால் வலி ஏற்படாது.

Author : சேர்மசாமி

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu