Dailyhunt
காஞ்சிபுரம்: சரிந்த நோட்டா வாக்குகள்; தவெக-வின் வெற்றியால் மாறிய அரசியல் களம்!

காஞ்சிபுரம்: சரிந்த நோட்டா வாக்குகள்; தவெக-வின் வெற்றியால் மாறிய அரசியல் களம்!

ABP Nadu 3 days ago

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும், கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தலை விட இந்த முறை நோட்டா (NOTA) வாக்குகள் கணிசமாகக் குறைந்துள்ளன.

எந்த ஒரு வேட்பாளரையும் பிடிக்காத நிலையில் வாக்காளர்கள் பயன்படுத்தும் இந்த 'நோட்டா' விருப்பம், இம்முறை மாவட்ட அளவில் 2,917 வாக்குகள் வரை சரிவைச் சந்தித்துள்ளது.

இருமுனைப் போட்டியில் ஏற்பட்ட மாற்றம்

பொதுவாக தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளையும் பிடிக்காத வாக்காளர்கள், தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக நோட்டா சின்னத்திற்கு வாக்களிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதன் காரணமாக, கடந்த சில தேர்தல்களாக நோட்டாவிற்கு விழும் வாக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததை நாம் காண முடிந்தது. குறிப்பாக, 2021 சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் நான்கு தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 7,533 பேர் நோட்டாவிற்கு வாக்களித்திருந்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தாக்கம்

இந்தச் சூழலில் தான், நடப்புத் தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும்தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அமோக வெற்றி பெற்றுள்ளது. வழக்கமாக மாற்று அரசியலைத் தேடும் வாக்காளர்களும், திமுக-அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் தவிர்க்க விரும்பியவர்களும் இந்த முறை நோட்டாவைத் தேர்வு செய்யாமல், தவெக-விற்குத் தங்களது ஆதரவை அளித்துள்ளதாகக் கருதப்படுகிறது. புதிய அரசியல் வருகையால் வாக்காளர்களின் ஆர்வம் நோட்டாவிலிருந்து மாறி, ஒரு குறிப்பிட்ட கட்சிக்குத் திரும்பியதே இந்த சரிவுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

நோட்டா வாக்குகளின் தற்போதைய நிலவரம்

புள்ளிவிவரங்களின்படி, இந்தத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் 1,078 வாக்குகளும், உத்திரமேரூரில் 1,114 வாக்குகளும், ஸ்ரீபெரும்புதூரில் 1,161 வாக்குகளும், ஆலந்தூரில் 1,263 வாக்குகளும் என நான்கு தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 4,616 வாக்குகள் மட்டுமே நோட்டாவிற்குப் பதிவாகியுள்ளன. இது கடந்த முறையை விட 2,917 வாக்குகள் குறைவாகும்.

வியப்பில் தேர்தல் அதிகாரிகள்:

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 21,661 பேர் நோட்டாவிற்கு வாக்களித்திருந்த நிலையில், தற்போது சட்டமன்றத் தேர்தலில் அந்த எண்ணிக்கை இவ்வளவு பெரிய அளவில் குறைந்திருப்பது தேர்தல் அதிகாரிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தங்களின் வாக்குகளை வீணாக்காமல், ஏதேனும் ஒரு வேட்பாளருக்குச் செலுத்துவதில் காட்டிய முனைப்பு இந்தத் தேர்தல் முடிவுகளின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

Author : கிஷோர்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu