தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. விஜய் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்புதான் தீவிர அரசியலில் களமிறங்கினார்.
கரூர் துயர சம்பவம்:
அவர் மக்கள் சந்திப்பை தீவிரப்படுத்திய நிலையில், கரூரில் அவரது பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மிகப்பெரிய பின்னடைவை தவெக-விற்கு ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தவெக தரப்பில் ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
41 குடும்பங்களுக்கு அரசு வேலை:
இந்த சூழலில், முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் வரும் 10ம் தேதி கரூருக்குச் செல்கிறார். அப்போது, அவர் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்த 41 பேர் குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை வழங்க விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் உள்ளவர்களின் கல்வித்தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, வருவாய் உள்ளிட்ட துறைகளில் பணி ஒதுக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சரான பின்பு முதன்முறை:
கரூர் துயர சம்பவத்தின்போது விஜய் சம்பவம் நடைபெற்ற அன்றே சென்னை திரும்பியது மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சென்று சந்திக்காமல் சென்னை வரவழைத்து சந்தித்ததும் எதிர்க்கட்சியினரால் விமர்சனத்திற்கு ஆளானது. அதன்பின்னர், உரிய பாதுகாப்பு இல்லாத காரணத்தாலும் மீண்டும் கூட்டநெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவுமே கரூர் செல்லாமல் விஜய் தவிர்த்ததாக தவெக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த சூழலில், முதலமைச்சரான பிறகு திருச்சி தவிர வேறு எந்த மாவட்டத்திற்கும் செல்லாத விஜய் தற்போது கரூர் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்களான எம்ஆர் விஜயகர், சி விஜயகர் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர்கள் தவெக-வில் நேற்று இணைந்தனர். இந்த விவகாரத்தை திசைதிருப்பவும் விஜய் கரூருக்குச் செல்வதாகவும் எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
ஏற்பாடுகள் தீவிரம்:
விஜய் கரூர் செல்ல உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 41 பேர் குடும்பங்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவது மட்டுமின்றி மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் விஜய் தொடங்கி வைக்க உள்ளார்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயகர் தவெக-வில் இணைந்த பிறகு விஜய் முதன்முறையாக கரூர் வர இருப்பதால் அவரை வரவேற்க எம்ஆர் விஜயகர் பிரம்மாண்ட ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.
Author : சுகுமாறன்

