கேரளம் மாநிலத்தில் கறிக்குழம்பு சமைக்காத ஆத்திரத்தில் மனைவியை அவரது கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளம் மாநிலம் மலப்புரத்தில் தான் இந்த கொடூர சம்பவமானது நடைபெற்றுள்ளது. அங்குள்ள வண்டூர் பகுதியை அடுத்து பாரசேரி என்ற இடத்தில் ரஷீத் என்பவர் தனது மனைவி பசிலாவுடன் வசித்து வந்தார். ரஷீத்துக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். எப்போதும் மது அருந்துவிட்டு வந்து மனைவியை கண்டபடி திட்டுவது, சண்டைக்கும் இழுப்பதுமாக ரஷீத் வாழ்ந்து வந்துள்ளார்.
இப்படியான நிலையில் ரஷீத் நேற்று முன்தினம் தனது மனைவியிடம் கறிக்குழம்பு செய்து வைக்க வேண்டும் என கூறிவிட்டு வேலைக்கு சென்றிருக்கிறார். மதிய நேரத்தில் சாப்பிட வீட்டுக்கு வந்து பார்த்தால் அவர் சொல்லிச் சென்ற கறிக்குழம்பு சமைக்கப்படாமல் இருந்தது. இதுதொடர்பாக மனைவி பசீலாவுடன் அவருக்கு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ரஷீத் மனைவியை தாக்கத் தொடங்கியுள்ளார்.
ஆனாலும் ஆத்திரம் தீராத ரஷீத் தனது பேச்சை மனைவி கேட்க மறுத்ததோடு மட்டுமல்லாம எதிர்த்தும் பேசியதால் கோபத்தின் உச்சிக்கே சென்று சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து மனைவி பசிலாவை சரமாரியாக குத்தினார். இதனை சற்றும் எதிர்பாராத மனைவி கணவனின் தாக்குதலை தடுக்க முயன்றும் முடியவில்லை. இதில் படுகாயமடைந்த பசிலா ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்தார்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது தான் இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. உடனடியாக பசிலாவை மீட்டு அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு முயற்சிக்கப்பட்டும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த கொலை சம்பவம் தொடர்பாக வண்டூர் போலீசாருக்கு மருத்துவமனை தரப்பில் புகாரளிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பசிலா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மலப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதுமட்டுமல்லாமல் உடனடியாக விசாரணை நடத்தியதில் கறிக்குழம்பு சமைக்காத ஆத்திரத்தில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. இதன்பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரஷீத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் மலப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கூறும்போது ரஷீத் அடிக்கடி இதுபோன்று மது அருந்து விட்டு மனைவியுடன் தகராறு பிடிப்பது வழக்கம். அப்படித்தான் இந்த சம்பவமும் என நினைத்தோம். ஆனால் அது கடைசியில் கொலையில் முடிந்து விட்டது என வருத்தம் தெரிவித்தனர்.
Author : பேச்சி ஆவுடையப்பன்

