Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?

கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?

ABP Nadu 1 week ago

மேகதாது அணை பிரச்சினையில் இரு மாநிலங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் அரசியல் நாடகம் நடத்துவது மோடி அரசுதான் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் அதில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட, ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம், அணை கட்டுவதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்று நான் கூறியதை, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேலியும், கிண்டலுமாக விமர்சித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் குற்றுயிரும், குலையுயிருமாக இருந்த பாஜக, கடந்த மே மாதம் 4 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, இருந்த இடம் தெரியாத அளவுக்கு காணாமல் போய் விட்டது. ஒரே ஒரு தொகுதியில் மட்டும் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில், சொந்த செல்வாக்கால் பாஜக சார்பில் போட்டியிட்டவர் சட்டப்பேரவைக்குள் நுழைந்திருக்கிறார். அவரும் எப்போது அண்ணாமலை பக்கம் தாவுவார் என்பது தெரியவில்லை.

தமிழ்நாட்டு மக்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்ட, தமிழ்நாட்டில் காலூன்றவே முடியாத பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்து கொண்டு, கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கருத்தை நயினார் நாகேந்திரன் கிண்டலடித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இதைப் பார்த்து தமிழ்நாட்டு மக்கள் கைகொட்டி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆண்டாலும், பாஜக ஆண்டாலும் காவிரி நதி நீர் பிரச்சினையில் தமிழ்நாட்டின் குரலை அவர்கள் பொருட்படுத்துவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடந்தபோது முதலமைச்சராக இருந்த எடியூரப்பா, பசவராஜ் பொம்மை போன்றவர்கள், மேகதாது அணையை கட்டியே தீருவோம். தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க மாட்டோம் என்று முழங்கியதையெல்லாம் நயினார் நாகேந்திரன் மறந்து விட்டார் என்று நினைக்கிறேன். மேகதாது அணை கட்ட வலியுறுத்தி, தமிழ்நாடு எல்லை வரை வந்து எடியூரப்பா போராட்டம் நடத்தியதை தமிழ்நாட்டு மக்கள் மறக்கவில்லை.
நதிநீர் விவகாரம் உள்பட இரு மாநிலங்களுக்கு இடையிலான எந்தப் பிரச்னையையும், சுமூகமாக தீர்க்க வேண்டியது ஒன்றிய அரசின் பொறுப்பாகும். பிரதமரின் கடமையாகும்.

வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!

ஆனால் அந்த கடமையை செய்யாமல் தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒன்றிய பாஜக அரசு நடத்தி வருகிறது. அதனால் தான் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே எந்த அணையையும் கட்டக் கூடாது என்று காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் தெளிவாக தீர்ப்பளித்துள்ளன. அதன் பிறகும், மேகதாது அணை கட்டுவதற்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு ஒன்றிய பாஜக அரசு அனுமதி அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி, பிரச்னைக்கு சுமூக தீர்வு காணாமல், இரு மாநிலங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் அரசியல் நாடகத்தை மோடி அரசு அரங்கேற்றி வருகிறது” என சரமாரியாக சாடியுள்ளார்.

Author : பேச்சி ஆவுடையப்பன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu