இந்திய கார் சந்தையில் குறைவான விலை மற்றும் அதிக மைலேஜ் தரும் சிறிய கார்களுக்கான தேவை மீண்டும் அதிகரித்துள்ளது.
2026 ஆகஸ்ட் மாதத்தில் வாடிக்கையாளர்களால் அதிகம் வாங்கப்பட்ட வாகனங்களில் மாருதி சுஸுகியின் மினி ரக கார்களான எஸ்-பிரஸ்ஸோ மற்றும் ஆல்டோ கே10 ஆகியவை முன்னணியில் உள்ளன.
விற்பனைவிவரம்
2025 ஆகஸ்டில் 6,853 ஆக இருந்த இவ்விரு கார்களின் விற்பனை, 2026 ஆகஸ்டில் 8,799 ஆக உயர்ந்துள்ளது. மாருதியின் ஒட்டுமொத்த விற்பனையும் 2025 ஆகஸ்டில் 1,80,683-லிருந்து 2026 ஆகஸ்டில் 2,19,220 ஆக (21.3% வளர்ச்சி) அதிகரித்துள்ளது. உள்நாட்டு விற்பனை 1,31,278-லிருந்து 1,76,971 ஆக உயர்ந்துள்ளது. மினி ரக கார்கள் இந்த வளர்ச்சிக்கு முக்கியப் பங்களித்துள்ளன.
மாருதிஎஸ் பிரஸ்ஸோ
பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இதில் 68 PS பவர், 89 Nm டார்க் திறன் கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இதில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன்கள் உள்ளன. இதன் சிஎன்ஜி வேரியண்ட் 56.69 PS பவர், 82.1 Nm டார்க் திறனை வழங்குகிறது. மைலேஜைப் பொறுத்தவரை பெட்ரோல் வேரியண்ட் 24 - 24.76 kmpl வரையும், சிஎன்ஜி 32.73 km/kg வரையும் தருகிறது. எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.50 லட்சத்தில் தொடங்குகிறது.
வடிவமைப்பில் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் 7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், முன்பக்க பவர் விண்டோஸ், கீலெஸ் என்ட்ரி, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்யும் ORVM, கேபின் ஏர் ஃபில்டர் ஆகியவை உள்ளன. தற்போது இரட்டை ஏர்பேக் உள்ள நிலையில், விரைவில் 6 ஏர்பேக்குகள் நிரந்தரமாக்கப்பட உள்ளன.
ஆல்டோகே10
ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்ட இதில் உள்ள 1.0 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் 66.62 PS பவர், 89 Nm டார்க் திறனை அளிக்கிறது. மேனுவல், ஆட்டோமேட்டிக் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களில் இது கிடைக்கிறது. மைலேஜில் ஆட்டோமேட்டிக் 24.90 kmpl, மேனுவல் 24.39 kmpl, சிஎன்ஜி 33.85 km/kg என்ற அளவைக் கொண்டுள்ளன. ஆரம்ப விலை சுமார் ரூ.3.70 லட்சமாகும்.
இதில் 7-இன்ச் ஃப்ளோட்டிங் டச் ஸ்கிரீன், யூஎஸ்பி, ப்ளூடூத், ஆக்ஸ், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஸ்டீயரிங் கன்ட்ரோல்கள் உள்ளன. பாதுகாப்பிற்கு 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ப்ரீ-டென்ஷனர்கள், ஸ்பீட் சென்சிங் ஆட்டோ டோர் லாக் மற்றும் அதிவேக எச்சரிக்கை வசதிகள் உள்ளன.
என்ன காரணம்?
குறைவான விலை, சிறந்த மைலேஜ், போக்குவரத்து நெரிசலில் எளிதாக ஓட்டுவதற்கும் பார்க் செய்வதற்கும் ஏற்ற சிறிய வடிவம் மற்றும் தினசரி பயணங்களுக்கான சிஎன்ஜி ஆப்ஷன் ஆகியவையே இந்த கார்களின் விற்பனை அதிகரிப்புக்கு முக்கியக் காரணங்களாகும். இதன்மூலம் சிறிய கார்களுக்கான தேவை சந்தையில் வலுவாக இருப்பது உறுதியாகியுள்ளது.
Author : க.சே.ரமணி பிரபா தேவி

