தமிழ்நாடு தாண்டினால் விஜயை பலருக்கும் தெரியாத சூழலில் அவர் பிரதமர் வேட்பாளராக கூறப்படுகிறாரா என மாநிலங்களவை எம்பி எல்.கே.சுதீஷ் கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு தாண்டினால் விஜயை தெரியாது
வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றப் பின் சுதீஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தனியார் ஊடகம் நடத்திய கருத்துக்கணிப்பில் முதலமைச்சர் விஜய் பிரதமருக்கான போட்டியில் 3ம் இடம் பெற்றுள்ளதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு நான் அந்த செய்தியைப் பார்க்கவே இல்லை. பிரதமர் நரேந்திர மோடியும், ராகுல்காந்தியும் தான் இன்றைக்கு பிரதமர் வேட்பாளர் போட்டியில் இருக்கிறார்கள். ஏனென்றால் முதலமைச்சர் விஜயை தமிழ்நாட்டை தாண்டினால் வட இந்தியாவில் தெரியுமா, தெரியாதா என்பது தெரியவில்லை. இந்தியா என்பது மிகப்பெரிய நாடு என பதிலளித்தார்.
தவெகவின் 100 நாட்கள் ஆட்சியை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு ஜஸ்ட் , அதாவது 35 மதிப்பெண்கள் கொடுக்கலாம் என கூறினார்.
மக்கள் பணத்தை தொட்டால் தப்புதான்
மக்களுடைய பணத்தை தொடமாட்டேன், தொட்டால் விட மாட்டேன், தொட்டவர்களையும் விட மாட்டேன் என சொன்ன முதலமைச்சர் விஜய் மேட்டூர் அணை திறக்க செல்லும்போது மக்கள் பணத்தில் பலகோடி செலவிடப்பட்டதே என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் சொன்ன எல்.கே.சுதீஷ், விஜய் பயணத்திற்கு செலவிடப்பட்டது கட்சி நிதியா, அரசுப்பணமா என தெரியவில்லை. அரசுப்பணம் என்றால் அது நிச்சயம் தவறு தான். திமுக, அதிமுக இதுபோன்ற தவறை செய்ததால் தான் மக்கள் திரும்ப ஆட்சியில் அமரவைக்கவில்லை. அதே தவறை விஜயும் செய்தார் என்றால் மக்கள் கண்டிப்பாக 2031ல் பதிலளிப்பார்கள்.
திமுக, அதிமுக ஏற்க மறுப்பது ஏன்?
வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை மேம்பாலம் இல்லாமல் உள்ளதால் கடும் போக்குவரத்து நெருக்கடி உள்ளது. இதனை சரி செய்வோம் என சொல்லி தான் தவெக வாக்கு வாங்கினார்கள். மக்கள் தங்கள் கோபத்தை தேர்தலில் காட்டினார்கள். ஆனால் திமுக, அதிமுக அதனை ஏற்றுக்கொள்ளாமல் இது இவிஎம் மிஷின் மற்றும் மோடி, அமித்ஷாவின் சதி என சொல்கிறார்களே என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, எங்களுக்கு இவிஎம் மிஷின் மேல ஒரு சந்தேகம் இருக்கிறது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை மாற்றம் வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. சட்டப்பேரவையில் எல்லா கேள்விகளுக்கும் ஒரு சில அமைச்சர்கள் தான் பதிலளிக்கிறார்கள். இதனை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எத்தனையோ முறை சொல்லி விட்டார். தவறை சுட்டிக்காட்டும் இடத்தில் நாங்கள் இருந்து சொல்கிறோம். இதற்கு மேல் அவர்கள் தான் திருத்திக் கொள்ள வேண்டும் என எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார்.
Author : பேச்சி ஆவுடையப்பன்

