Dailyhunt
மக்களுக்கான பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்... திமுக தஞ்சை தொகுதி வேட்பாளர் உறுதிமொழி

மக்களுக்கான பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்... திமுக தஞ்சை தொகுதி வேட்பாளர் உறுதிமொழி

ABP Nadu 1 week ago

ஞ்சாவூர்: மக்களுக்கான பணிகள் அனைத்தும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படும் என்று தனது ஓய்வில்லா பிரச்சாரத்தில் உறுதியளித்து பேசி வாக்குகள் சேகரித்தார் தஞ்சாவூர் திமுக சட்டமன்ற வேட்பாளர் சண்.ராமநாதன்.

இவருக்கு பொதுமக்கள் தரப்பில் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் மாநகராட்சி பகுதியில் 5 வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காலை 42 வது வார்டு செங்கலாச்சியம்மன் கோயில் பகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து 43 வது வார்டு மருத்துவக் கல்லூரி பகுதியில் ஒவ்வொரு நகர், தெருவாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேட்பாளருடன் எம்.பி.முரசொலி, சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் கட்சி நிர்வாகிகள், ஏராளமான கூட்டணி கட்சியினர் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

பின்னர் மாலை ஆற்றுப்பாலம் சட்டமன்றத் தேர்தல் பணிமனையிலிருந்து திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் பிரச்சாரத்தை தொடங்கினார். 29,30,31 ஆகிய வார்டுகளில் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வேட்பாளர் சண்.ராமநாதன் பேசுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பை உயர்த்த உணவு பதப்படுத்தலுக்கான திறன் பயிற்சி வழங்கப்படும். உழவர் சந்தைகள்' வெற்றிகரமாக செயல்படுவது போல், நகர்ப்புற பகுதிகளில், உழவர் அங்காடிகள் அமைக்கப்படும்.

தஞ்சை மாநகராட்சி பகுதியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும். தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்று நோய்க்கான நவீன சிரிச்சை வசதி ஏற்படுத்தப்படும். இளைஞர்களுக்காக புதிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு நெல் அரவை ஆலை அமைக்கப்படும்.

மாநகராட்சி முழுவதும் முழுமையான பாதாள சாக்கடைத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதிகளை தெரிவித்து வாக்குகள் சேகரித்தார். மேலும் தமிழக அரசு செயல்படுத்தி மக்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்ற பெண்களின் சமூக நீதி மற்றும் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பல்வேறு புரட்சிகரமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திராவிட மாடல் ஆட்சியின் முக்கிய அம்சமாக விளங்கும் இந்த திட்டங்கள், பெண்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

அரசு பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில், தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடியே 15 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இது பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்கு பெரும் உதவியாக உள்ளது.

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தால் கல்லூரியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34% அதிகரித்துள்ளது. இதுவரை சுமார் 4.95 லட்சம் மாணவிகள் இதன் மூலம் பயன்பெற்றுள்ளனர். வேலை நிமித்தமாக வெளியூர் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான தங்குமிடத்தை உறுதி செய்கிறது.

சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உச்சவரம்பு ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியை விட, தற்போதைய ஆட்சியில் மும்மடங்கு அதிகமாக கடன் வழங்கப்பட்டுள்ளது. ரூ.2,755.99 கோடி மதிப்பிலான பழைய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, சுமார் 16 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர். அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தாய்-சேய் நலனில் அரசு கொண்டுள்ள அக்கறையை காட்டுகிறது. இதுபோன்று பல்வேறு சிறப்பு திட்டங்களை திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது என்று கூறி வாக்குகள் சேகரித்தார்.

Author : என்.நாகராஜன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu