Dailyhunt
"மதிமுக-விற்காக மாங்கு மாங்குனு வாக்கு சேகரித்த துர்கா ஸ்டாலின் - மீனவ கிராமங்களில் சூறாவளி பிரச்சாரம்..!

"மதிமுக-விற்காக மாங்கு மாங்குனு வாக்கு சேகரித்த துர்கா ஸ்டாலின் - மீனவ கிராமங்களில் சூறாவளி பிரச்சாரம்..!

ABP Nadu 5 days ago

சீர்காழி: தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.

வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்து, அனைத்துக் கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தை முழு வீச்சில் முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில், சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) வேட்பாளர் செந்தில் செல்வனை ஆதரித்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்றிரவு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மீனவ கிராமங்களில் எழுச்சிமிகு வரவேற்பு

சீர்காழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கடற்கரை கிராமங்களான பழையார், மடவாமேடு, திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் துர்கா ஸ்டாலின் நேற்றிரவு தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். ஒரு சாதாரண குடிமகளாக, எளிய முறையில் மக்களைச் சந்தித்த அவருக்கு, மீனவப் பெண்கள் ஆரத்தி எடுத்து, பூர்ணகும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

குறிப்பாக, மடவாமேடு மீனவ கிராமத்திற்கு வருகை தந்த துர்கா ஸ்டாலின், அங்குள்ள புகழ்பெற்ற கன்னியம்மன் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார். கோயிலில் வழிபாடு நடத்திய பின், அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான பெண்களிடையே இந்தியா கூட்டணியின் சாதனைகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் விளக்கிப் பேசினார். பின்னர், வீடு வீடாகச் சென்று உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களை வழங்கி, மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வனுக்கு ஆதரவு கோரினார்.

மக்களுடன் ஒருவராக..

பிரச்சாரத்தின் போது துர்கா ஸ்டாலினைக் கண்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். பல பெண்கள் அவரோடு கைகுலுக்கியும், நலம் விசாரித்தும் மகிழ்ந்தனர். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் இல்லத்தரசிகள் அவரோடு சுயபடம் (Selfie) எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர். மக்களின் வேண்டுகோளை ஏற்று, புன்னகையுடன் அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட துர்கா ஸ்டாலின், அனைவரிடமும் கனிவாக உரையாடினார்.

குழந்தைகளை கொஞ்சிய துர்கா ஸ்டாலின்

இதனைத் தொடர்ந்து, தொடுவாய் கிராமத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு பெண் தனது இரட்டைக் குழந்தைகளுடன் முன்னால் வந்தார். இதைக் கண்ட துர்கா ஸ்டாலின், அந்த குழந்தைகளைத் தனது கைகளில் ஏந்தி, அன்புடன் கொஞ்சி மகிழ்ந்தார். இந்த நெகிழ்ச்சியான தருணம் அங்கிருந்த மகளிரை வெகுவாகக் கவர்ந்தது.

தொடர்ந்து அங்கு கூடியிருந்த மகளிர் சுயஉதவிக் குழுவினரிடம் பேசிய அவர், "திமுக அரசு எப்போதும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், மீனவர்களின் நலனுக்காகவும் பாடுபடும் அரசு. இந்தத் தேர்தலில் செந்தில் செல்வன் அவர்களுக்குப் பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

தரிசனமும், மனுக்கள் ஏற்பும்

பிரச்சாரத்தின் இறுதிப் பகுதியாக, புகழ்பெற்ற மீனவக் கிராமமான திருமுல்லைவாசலுக்கு வருகை தந்தார். அங்குள்ள அருள்மிகு ஸ்ரீ செல்ல காளியம்மன் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த அவர், அந்தப் பகுதியின் பாரம்பரியம் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்து அங்கிருந்த பெரியவர்களிடம் கேட்டறிந்தார்.

அப்போது, திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், தங்கள் பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகள், தூண்டில் வளைவு அமைத்தல் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கான மானியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அவரிடம் வழங்கினர்.

மனுக்களைப் பெற்றுக்கொண்ட துர்கா ஸ்டாலின் மக்களிடம் பேசுகையில்:

"உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை. மீனவ கிராமங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நீங்கள் அளித்துள்ள மனுக்களில் உள்ள அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றவும் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார். அதற்கு இந்தத் தொகுதியில் நமது வேட்பாளர் செந்தில் செல்வன் வெற்றி பெறுவது அவசியம்," என்றார்.

திரண்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள்

இந்தத் தீவிர வாக்கு சேகரிப்பு நிகழ்வின் போது, சீர்காழி தொகுதி திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். திமுக மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், மதிமுக நிர்வாகிகள், மற்றும் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

தமிழக முதல்வரின் மனைவி நேரடியாகக் களமிறங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது, சீர்காழி சட்டமன்றத் தொகுதி மீனவ மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Author : எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu