பஹ்ரைன் நாட்டிலுள்ள அமெரிக்க ராணுவத்தளங்கள் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை தாக்குதல் நடத்தியுள்ளது.
தொடரும் ஈரான் - அமெரிக்கா மோதல்
இஸ்ரேலை எதிர்த்து வந்த ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும் ஈரான் ஆதரவு அளித்து வந்ததன் காரணமாகவும், அணுசக்தி கட்டமைப்புக்காகவும் அமெரிக்க - இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து இரு நாடுகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக பாரசீக வளைகுடா நாடுகளில் இருந்து பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய முக்கிய நுழைவு வாயிலாக இருந்த ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் மூடியது. மேலும் தனது நட்பு நாடுகளுக்கு மட்டுமே ஹோர்மூஸ் நீரிணையை கடக்க ஈரான் அனுமதியளித்ததன் காரணமாக அந்நாட்டிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
ஈரான் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு இடையூறு அளித்ததோடு, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களையும் குவைத், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அதன் நட்பு நாடுகளையும் தாக்கியது.
அமெரிக்க ராணுவத்தளங்கள் மீது தாக்குதல்
இந்நிலையில் பஹ்ரைனிலுள்ள அமெரிக்க ராணுவத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது. அந்நாட்டிலுள்ள அல்-ரிஃபா மற்றும் அவாலி ராணுவத் தளங்களின் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அமெரிக்காவின் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புக்களை அழித்ததாகவும் ஈரான் புரட்சிக்கர காவல்படை அறிவித்துள்ளது.
இந்நிலையில் மக்கள் பயன்பாட்டிலுள்ள தொழிற்சாலையை ஈரான் தாக்கியதாக பஹ்ரைன் அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Author : விவேக் தங்கராஜ்

