மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில், முதியவர் ஒருவரை கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் தொடர்புடைய சகோதரர்கள் இருவருக்கும் தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா இருபத்தைந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சீர்காழி சார்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல்துறையினரின் நடவடிக்கை அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கோயில் திருவிழாவில் வெடித்த மோதலும் கொலை முயற்சியும்
மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஆதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு என்பவரின் 59 மகனான மகாதேவன். அதே ஆதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன்களான சதீஷ் என்கிற மதிசெல்வம் மற்றும் காளிமுத்து ஆகிய இருவரும் சகோதரர்கள் ஆவர்.
இந்நிலையில் கடந்த 29.04.2018 அன்று ஆதமங்கலம் கிராமத்தில் கோயில் திருவிழா விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. திருவிழாக் கொண்டாட்டங்களின் போது மகாதேவனுக்கும், சகோதரர்களான சதீஷ் மற்றும் காளிமுத்து ஆகியோருக்கும் இடையே எதிர்பாராத விதமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சதீஷ் மற்றும் காளிமுத்து ஆகிய இருவரும் சேர்ந்து மகாதேவனை கத்தியால் சரமாரியாகத் தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளனர். கத்திக்குத்து தாக்குதலில் பலத்த காயமடைந்த மகாதேவன், உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காவல்துறையின் துரித நடவடிக்கையும் குற்றப்பத்திரிகை தாக்கலும்
பின்னர் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மகாதேவன் வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர், சகோதரர்களான சதீஷ் என்கிற மதிசெல்வம் மற்றும் காளிமுத்து ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அப்போதைய வைத்தீஸ்வரன்கோவில் காவல் ஆய்வாளர் சிங்காரவேலு இந்த வழக்கின் விசாரணையைத் தீவிரமாக மேற்கொண்டு, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தடயங்களைச் சேகரித்ததோடு, சாட்சிகளிடம் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த எதிரிகள் இருவரையும் அதிரடியாகக் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார். மேலும், வழக்கின் அனைத்து ஆதாரங்களையும் திரட்டி, எதிரிகள் மீது உரிய காலத்தில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தார்.
எட்டு ஆண்டுகால சட்டப் போராட்டமும் நீதிமன்றத் தீர்ப்பும்
இந்த கொலை முயற்சி வழக்கின் விசாரணையானது சீர்காழி சார்பு நீதிமன்றத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் சாட்சிகள் மற்றும் மருத்துவ ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, எதிரிகளின் குற்றச்செயல்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இவ்வழக்கினை விசாரித்த சீர்காழி சார்பு நீதிமன்ற நீதிபதி வேதகிரி இறுதித் தீர்ப்பினை வழங்கினார்.
அதில், ஆதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்கிற மதிசெல்வம் மற்றும் காளிமுத்து ஆகிய இருவரும் மகாதேவனைக் கொலை செய்ய முயன்ற குற்றவாளிகள் என நீதிபதி உறுதி செய்தார். அதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் இருவருக்கும் தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா இருபத்தைந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி வேதகிரி உத்தரவிட்டார்.
சிறையில் அடைப்பு மற்றும் காவல்துறைக்குப் பாராட்டு
நீதிமன்றத்தால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குற்றவாளிகளான சதீஷ் என்கிற மதிசெல்வம் மற்றும் காளிமுத்து ஆகிய இருவரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருவிழாக் காலங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், தனிநபர் விரோதத்தால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் எவ்வித தொய்வுமின்றி சாட்சிகளை ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்த காவல்துறையினரின் சிறப்பான பணியை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா வெகுவாகப் பாராட்டினார்.
Author : எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை

