Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மயிலாடுதுறையில் ரெளடிகளை கலங்க வைக்கும் எஸ்பியின் குண்டாஸ் வேட்டை! அடுத்து யார் கைது...?

மயிலாடுதுறையில் ரெளடிகளை கலங்க வைக்கும் எஸ்பியின் குண்டாஸ் வேட்டை! அடுத்து யார் கைது...?

ABP Nadu 1 week ago

யிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச் செயல்களை முற்றிலும் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் அமைதியான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்யவும் மாவட்ட காவல்துறை பல்வேறு தீவிர தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ஆணைக்காரன்சத்திரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கும் தனிநபர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக செயல்பட்டு, கொடூரமான கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட போக்கிரி சரித்திர பதிவேடு குற்றவாளி மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டம் பாயிந்துள்ளது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தீவிர பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவின் பேரில் அந்தப் போக்கிரி குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கொலை முயற்சி சம்பவம்

மயிலாடுதுறை மாவட்டம், ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமயிலாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜி (42), தந்தை பெயர் கலியபெருமாள். இவர் அப்பகுதியில் தொடர்ந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையத்தில் இவர் மீது போக்கிரி சரித்திர பதிவேடு (History Sheeter / Rowdy Sheet) துவங்கப்பட்டு, காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 15.08.2026 அன்று திருமயிலாடி பகுதியைச் சேர்ந்த ஒரு நபரை ராஜி திடீரெனத் தாக்கி, அவருக்குக் கடுமையான காயங்களை ஏற்படுத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டார். இக்கொடூர அராஜகச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலைய காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட எதிரி ராஜியை காவல்துறையினர் விரைந்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆட்சியரின் குண்டர் சட்ட உத்தரவும்

நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்ட போதிலும், எதிரி ராஜி தொடர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பிற்குத் அச்சுறுத்தலாகவும் நடந்து கொள்ளும் குற்றப் பின்னணி கொண்டவர் என்பதால், அவர் மீது சாதாரண சட்ட நடவடிக்கைகளுடன் நிறுத்தாமல் கடுமையான தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறை திட்டமிட்டது. ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையத்தில் போக்கிரி சரித்திர பதிவேடு துவங்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையிலும், இவர் வெளியே இருந்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அபாயம் நிலவியது.

எனவே, பொது அமைதியைப் பேணி காக்கும் பொருட்டு, ராஜி மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹா ப்ரியா, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு முறைப்படி பரிந்துரை செய்தார். மாவட்ட எஸ்பியின் விரிவான பரிந்துரையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் எதிரி ராஜியைத் தடுப்புக் காவல் சட்டத்தின்படி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

காவல்துறையின் அதிரடி நடவடிக்கை

மாவட்ட ஆட்சியரின் குண்டர் சட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கான அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை காவல்துறையினர் உடனடியாக முடுக்கிவிட்டனர். மாவட்ட எஸ்பியின் வழிகாட்டுதலின்படி, 01.09.2026 அன்று ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் சுகுணா மற்றும் காவல் ஆளிநர்கள் அடங்கிய தனிப்படையினர் குற்றவாளி ராஜியை பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் ஆணைக்காரன்சத்திரம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக விரோதிகளுக்குப் பலத்த எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.

46 குற்றவாளிகள் மீது குண்டாஸ்

மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றங்களை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் மாவட்ட காவல்துறை எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளின் பலனாக, நடப்பாண்டில் மட்டும் பல்வேறு தீவிர குற்றச் செயல்களில் ஈடுபட்ட மொத்தம் 46 நபர்கள் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் கொலைக் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 05 நபர்கள், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்த 14 நபர்கள், சட்டவிரோத மதுவிலக்குக் குற்றங்களில் ஈடுபட்ட 09 நபர்கள், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்களில் ஈடுபட்ட 15 நபர்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருளான குட்கா விற்பனையில் ஈடுபட்ட 01 நபர் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 02 நபர்கள் என மொத்தம் 46 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் அனைத்தும் காவல்துறையினரால் மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் மதுவிலக்குக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது எவ்விதத் தயவுமின்றி தடுப்புக் காவல் சட்டத்தின் (குண்டர் சட்டம்) கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹா ப்ரியா, மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்.

Author : எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu