Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?

MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?

ABP Nadu 2 weeks ago

MBBS Counselling Schedule: நீட் தேர்வு அடிப்படையில் இளநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தேதி பட்டியலை, மருத்துவ கலந்தாய்வு கமிட்டி அறிவித்துள்ளது.

இளநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு:

அகில இந்திய ஒதுக்கீட்டின் (AIQ) கீழ் MBBS மற்றும் பிற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையின் முதல் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கும் என மருத்துவ கலந்தாய்வு கமிட்டி அறிவித்துள்ளது. தொடர்ந்து 2026-27 ஆம் ஆண்டுக்கான கல்வி அமர்வு செப்டம்பர் 8 ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள கலந்தாய்வு அட்டவணைப்படி, நிகர்நிலை மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டுக் கலந்தாய்வின் முதல் சுற்று ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 17 வரை நடைபெறுகிறது. கல்லூர்யில் சேருவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 22 என குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது சுற்று கலந்தாய்வு - முழு விவரம்:

அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இரண்டாம் சுற்று கலந்தாய்வானது ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 2 வரையிலும், மூன்றாம் சுற்று செப்டம்பர் 10 தொடங்கி செப்டம்பர் 18 வரையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதல் காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்புச் சுற்று செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 3 வரை நடைபெற உள்ளது. இந்தச் சுற்றுக்குப் பிறகு கல்லூரியில் சேர்வதற்கான கடைசி தேதி அக்டோபர் 10 ஆகும்.

மாநில ஒதுக்கீட்டு கலந்தாய்வு எப்போது?

மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22ம் தேதி வரை நடைபெறும், விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 28-க்குள் கல்லூரியில் சேர வேண்டும். இரண்டாம் கட்டம் ஆகஸ்ட் 31ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8 வரையிலும், மூன்றாம் கட்டம் செப்டம்பர் 16ம் தேதி தொடங்கி செப்டம்பர் 26 வரையிலும் நடைபெறும். மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான மீதமுள்ள காலி இடங்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 3 முதல் அக்டோபர் 5 வரை நடத்தப்படும். இட ஒதுக்கீடு மற்றும் அதனைத் தொடர்ந்த ஒதுக்கீடுகளை எளிதாக்கும் வகையில், ஒவ்வொரு சுற்றுக்குப் பிறகும் மருத்துவக் கலந்தாய்வுக் குழு (MCC) மற்றும் மாநில கலந்தாய்வு அதிகாரிகளால் சேர்ந்த விண்ணப்பதாரர்களைச் சரிபார்ப்பதற்கான காலக்கெடுவையும் இந்த அட்டவணை கொண்டுள்ளது.

TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை

மருத்துவ கல்வியாண்டு தொடங்குவது எப்போது?

வெளியாகியுள்ள அட்டவணைப்படி, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கல்வியாண்டு செப்டம்பர் 8ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளையில், காலியாக உள்ள இடங்களுக்கான அடுத்தகட்ட கலந்தாய்வுகளும் அடுத்தடுத்து நடைபெற உள்ளன. பங்கேற்கும் அனைத்து கல்விநிறுவனங்களும், மாநில கலந்தாய்வு அதிகார அமைப்புகள் மற்றும் நியமிக்கப்பட்ட முகமைகள் கால அட்டவணையை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன. கலந்தாய்வு செயல்முறையை சரியான நேரத்தில் முடிப்பதை உறுதி செய்வதற்காக, அனைத்து சனிக்கிழமைகள், ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசிதழ் விடுமுறை நாட்களையும் வேலை நாட்களாகக் கருதுமாறும் கல்வி நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கான இணைய சேவைகள்

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் வரும் மருத்துவ கலந்தாய்வு குழுவானது, மாணவர் சேர்க்கை நடைமுறையை வெளிப்படையானதாகவும், மாணவர்களுக்கு உகந்ததாகவும் மாற்றும் முயற்சியில், நீட்-யுஜி 2026 கலந்தாய்வுச் செயல்பாட்டில் தொடர்ச்சியான மேம்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, கல்லூரி இட மேம்பாட்டைத் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களுக்கான கட்டாய நேரடி வருகை முறையை நீக்குதல் மற்றும் ஒதுக்கப்பட்ட இடம் வேண்டாம் என கருதினால் இணையவழியிலேயே விட்டுக்கொடுப்பது போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இணைய வழி ராஜினாமா..!

கலந்தாய்வு விதிகளின்படி, தனக்கு இடம் ஒதுக்கப்பட்ட கல்லூரிக்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள், விண்ணப்பதாரர்கள் நேரில் செல்ல வேண்டிய அவசியமின்றி, எம்.சி.சி கலந்தாய்வு இணையதளம் மூலம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விட்டுக்கொடுக்கும் கடிதத்தை இப்போது சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இட ஒதுக்கீட்டைக் கோரும் விண்ணப்பதாரர்கள், கலந்தாய்வு இணையதளத்தில் தங்களது ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்

Author : குலசேகரன் முனிரத்தினம்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu