Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மின் தடைக்கு நிரந்தர தீர்வு: தமிழக மின்வாரியத்தின் அதிரடி திட்டம்! விபரம் இதோ..

மின் தடைக்கு நிரந்தர தீர்வு: தமிழக மின்வாரியத்தின் அதிரடி திட்டம்! விபரம் இதோ..

ABP Nadu 2 weeks ago

மிழ்நாட்டில் மின் தடை அடிக்கடி ஏற்படுவதை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

எப்போதெல்லாம் மின் தடை ஏற்பட்டது என பகுதி வாரியாக பதிவேட்டை பராமரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நிலையான மற்றும் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய, மீண்டும், மீண்டும் ஏற்படும் மின்தடை பிரச்னைகளை நிரந்தரமாக நீக்கும் வகையில் Repeat Tripping Elimination Programme (RTEP)” என்ற புதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்துமாறு தமிழ்நாடு மின்வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மின் பகிர்மான அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், `தமிழ்நாடு தற்போது 3.5 கோடிக்கும் அதிகமான மின் நுகர்வோருக்கு சேவை வழங்கி வருவதாகவும், மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான துணை மின் நிலையங்கள், உயர் மின்னழுத்த மற்றும் தாழ் மின்னழுத்த மின் வலையமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும்' குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மின்விநியோகம் சீராக இருந்தாலும், சில குறிப்பிட்ட துணை மின் நிலையங்கள், மின் பாதைகள் மற்றும் மின் உபகரணங்களில் மீண்டும் மீண்டும் மின்தடை ஏற்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிரச்னைகளை தற்காலிகமாக சரிசெய்வதை விட, அதன் மூலக் காரணத்தை கண்டறிந்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே RTEP திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த ஆறு மாதங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்ட பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மின்தடையின் அடிக்கடி நிகழ்தல், பாதிக்கப்பட்ட நுகர்வோர் எண்ணிக்கை, சேவை பாதிப்பு உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய துணை மின் நிலையங்கள், கூடுதல் மின் பாதைகள், திறன் மேம்பாடு, நெட்வொர்க் தானியக்கம் உள்ளிட்ட நீண்டகால உள்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மீண்டும் மீண்டும் ஏற்படும் மின்தடைகள் குறைவதோடு, மின்விநியோக நம்பகத்தன்மை உயர்ந்து, நுகர்வோருக்கு தரமான மற்றும் தடையற்ற மின்சாரம் கிடைக்கும் என்று மின்வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Author : நாகராஜ்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu